உள்ளூர் செய்திகள்

சேலத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து சம்பவம்: ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 பயணிகள் உயிரிழப்பு

Published On 2023-10-13 16:00 IST   |   Update On 2023-10-13 16:00:00 IST
  • ரெயிலில் இருந்த முகமது ஷபி தவறி கீழே விழுந்தார்.
  • மின்னாம்பள்ளி-ஏத்தாப்பூர் ரெயில் நிலையம் இடையே சென்றபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்.

சேலம்:

ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா மதனப்பள்ளியை சேர்ந்தவர் முகமது ஷபி (38), இவர் நேற்று காட்பாடி-கோழிக்கோடு ரெயிலில் பொதுப்பெட்டியில் பயணம் செய்தார். அப்போது ரெயில் லோகூர்-டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் இருந்த முகமது ஷபி தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மற்றொரு சம்பவம்...

இதே போல சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள சின்னமசமுத்திரம் பஞ்சமர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). கட்டிட தொழிலாளியான இவர் தினமும் ரெயிலில் வேலைக்கு சென்று வந்தார். அதே போல நேற்றும் வேலை முடிந்து சேலத்தில் இருந்து சேலம்-விருதாச்சலம் ரெயிலில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது மின்னாம்பள்ளி-ஏத்தாப்பூர் ரெயில் நிலையம் இடையே சென்றபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்தில் இறந்தார்.

இதே போல சேலத்தை அடுத்த மேக்னசைட்-கருப்பூர் ரெயில் நிலையத்திற்கு இடையே நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை துண்டாகிய நிலையில் பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு போலீசாருடன் விரைந்து சென்ற அவர் விசாரணை நடத்தினார். அப்போது தலை துண்டாகிய நிலையில் இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் பொன்னம்மாப்பேட்டை ரெயில் தண்டவாளப்பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக நேற்றிரவு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்தும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து தண்டவாளத்தில் பிணமாக கிடந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News