உள்ளூர் செய்திகள்

ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 2-வது நாளாக பற்றி எரியும் தீ- வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-07-23 15:17 IST   |   Update On 2022-07-23 15:17:00 IST
  • நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.
  • தினமும் 100 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

நெல்லை:

நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது.

தினமும் 100 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் எழும் புகை மூட்டத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை அங்கு திடீரனெ தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனால் சங்கரன்கோவில் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

உடனே பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். ஆனாலும் தொடர்ந்து தீப்பற்றி எரிந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக குப்பைக்கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் புகை எழும்பியபடியே உள்ளது. இதனால் அதனை சுற்றி உள்ள புதுக்காலனி, பாலாஜி நகர், சிவாஜி நகர், சத்திரம் புதுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

வழக்கமாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை கிடங்கில் குவிக்கப்படும் குப்பைகள் மீது அவ்வப்போது தண்ணீர் ஊற்றுவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் லாரி பழுது காரணமாக தண்ணீர் ஊற்றவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் திடீரென தீ ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags:    

Similar News