உள்ளூர் செய்திகள்

கார்-லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி

Published On 2022-11-14 12:39 IST   |   Update On 2022-11-14 12:39:00 IST
  • கொடுமுடி அருகே உள்ள வளந்தாங்கோட்டையில் இருந்து 7 பேர் காரில் கரூர் நோக்கி நேற்று சென்று கொண்டு இருந்தனர்.
  • படுகாயம் அடைந்த 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொடுமுடி:

கொடுமுடி அருகே உள்ள வளந் தாங்கோட்டையில் இருந்து 7 பேர் காரில் கரூர் நோக்கி நேற்று சென்று கொண்டு இருந்தனர்.

ஒத்தக்கடை அருகே என்ற பகுதியில் மாலை 6 மணி அளவில் சென்றபோது காரும் கரூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளே இருந்த ஊட்டி கலைஞர் நகரை சேர்ந்த ரவிக்குமார் (70) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

காரில் இருந்த வளந்தாங் கோட்டையைச் சேர்ந்த கார்த்தி, சங்கர், செந்தில், குப்புசாமி, சசிதரன், சரவணன் (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து டிரைவர் தப்பி சென்று விட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுமுடி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரவிக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 6 பேரையும் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்ப–ட்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சரவணன் என்பவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News