உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் கடந்த மாதம் 17½ லட்சம் பேர் பயணம்

Published On 2023-05-06 08:42 IST   |   Update On 2023-05-06 08:42:00 IST
  • கடந்த மார்ச் மாதத்தைவிட ஏப்ரல் மாதம் 617 விமான சேவைகள் குறைந்து உள்ளன.
  • உள்நாட்டு விமான சேவைகளில்தான் குறைவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை :

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 12 ஆயிரத்து 22 விமானங்களில் 17 லட்சத்து 31 ஆயிரத்து 770 பேர் பயணம் செய்து உள்ளனர். அதில் 9,413 உள்நாட்டு விமானங்களில் 12 லட்சத்து 89 ஆயிரத்து 995 பேரும், 2,609 பன்னாட்டு விமானங்களில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 775 பேரும் பயணம் செய்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் உள்நாட்டு பயணிகளை பொறுத்தமட்டில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அந்தமான், கொச்சி, பெங்களூரு, மதுரை, கோவை உள்ளிட்ட விமானங்களிலும், பன்னாட்டு பயணிகள் இலங்கை, துபாய், அபுதாபி, சவுதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், பிரான்ஸ் உள்ளிட்ட விமானங்களிலும் அதிகமானவர்கள் பயணித்துள்ளனர்.

இந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில், வர்த்தகம், பணி நிமித்தம் செல்லும் பயணிகளும் கணிசமாக அதிகரித்து உள்ளனர்.

அதன்படி ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 405 விமானங்களில் 17 லட்சத்து 42 ஆயிரத்து 607 பேர் பயணம் செய்து உள்ளனர். இதில் உள்நாட்டு முனையத்தில் 8 ஆயிரத்து 751 விமானங்களில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 49 பேரும், பன்னாட்டு முனையத்தில் 2,654 விமானங்களில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 558 பேரும் பயணம் செய்து உள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தைவிட ஏப்ரல் மாதம் 617 விமான சேவைகள் குறைந்து உள்ளன. ஆனால் பயணிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 837 பேர் அதிகரித்து உள்ளனர். உள்நாட்டு விமான சேவைகளில்தான் குறைவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து பல்வேறு நாடுகள், நகரங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் உள்ளதால் சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் கோடை விடுமுறை காலத்தில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என்று தெரிகிறது.

தென்னிந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக பயணிகள் மற்றும் அதிக விமானங்களுடன் சென்னை விமான நிலையம் முன்னணியில் இருக்கிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் பெருமளவு சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News