காஞ்சிபுரத்தில் 12 சென்டிமீட்டர் மழை பதிவானது
- கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.
- காஞ்சிபுரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் 12 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.
காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வருகிறது. காலை முதலே கோடை வெயில் காய்ந்து வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், அய்யம்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், செவிலிமேடு, ஓரிக்கை, ஒலி முகமது பேட்டை, தாமல், பாலு செட்டி சத்திரம், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
காஞ்சிபுரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் 12 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. அதாவது 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டாலும் கோடை வெப்பம் தணிந்து உள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.