உள்ளூர் செய்திகள்

உற்சவ மூர்த்தி, கோவிலை சுற்றி வலமாக அழைத்து செல்லப்பட்ட காட்சி

ஓசூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோதண்டராமசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-08 15:15 IST   |   Update On 2022-09-08 15:15:00 IST
  • ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீ ராமருக்கு இங்கு கோவில் அமைக்க உத்தேசித்து,
  • ஓசூர் நேதாஜி சாலையில் உள்ள பிரசித்தி பெற்றதும், புகழ் மிக்கதுமான இந்த கோவிலில் உள்ள மூலவர் சீதா லக்ஷ்மண ஹனுமத் சமேதராக கல்யாண கோதண்ட ராமர் ஆக சேவை சாதித்து அருள் பாலிக்கிறார்.

ஓசூர்,

வடக்கில் காசி மாநகருக்கு ஒப்பாக தட்சிணகாசி என்றும் புகழ் பெற்ற சந்திரகிரி என்றழைக்கப்படும் தற்பொழுதைய ஓசூர் மாநகரில் மிகவும் பழமை வாய்ந்த மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோவில் மலை அமைந்துள்ளது.

இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் ராம நாமத்தின் பெருமையை இந்த உலகிற்கு உணர்த்தும் விதமாக ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீ ராமருக்கு இங்கு கோவில் அமைக்க உத்தேசித்து, அதன்படி சிவபெருமான் விருப்பத்தினால் அமையப்பெற்ற கோவிலாக இந்த ராமர் கோவில் அமைந்துள்ளது என்று புராணங்கள் வாயிலாக தெரியவரும் சிறப்பு பெற்றது.

ஓசூர் நேதாஜி சாலையில் உள்ள பிரசித்தி பெற்றதும், புகழ் மிக்கதுமான இந்த கோவிலில் உள்ள மூலவர் சீதா லக்ஷ்மண ஹனுமத் சமேதராக கல்யாண கோதண்ட ராமர் ஆக சேவை சாதித்து அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ திருவேங்கடமுடையான், ஸ்ரீ கருடாழ்வார் மற்றும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தனி சன்னதிகள் கொண்டு அருள் பாலிக்கின்றனர். அத்துடன், ஸ்ரீ அ னுமாரும் ராம நாம வரப்பிரசாதியாக அருள் பாலிக்கிறார்.

தற்போது, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் ேகாவிலில் பல ஆண்டுகளாக நடந்து வந்த புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று கோவிலில் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆகியன யாகசாலைகளில் பூரண கும்ப கலசங்கள் மற்றும் அவற்றுள் புனித நீரும் வைத்து பூஜிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பட்டாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரை கோபுர கலசங்களில் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மகாதீபாராதனை செய்யப்பட்டது. மேலும் உற்சவ மூர்த்தி, கோவிலை சுற்றி வலமாக அழைத்து செல்லப்பட்டார்.

விழாவில் ஓசூர் பகுதி மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் விழாவில் ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும் மாநகர காங்கிரஸ் தலைவர் நீலகண்டன் ஆகியோரும் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை தர்மகர்த்தாக்களான ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் மற்றும் ஜெய்சங்கர் குடும்பத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் செய்திருந்தனர்.

Tags:    

Similar News