- குற்றம்சாட்டப்பட்ட மரியதாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சுதா உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மூக்கண்டப்பள்ளி தேசிங் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வள்ளி (வயது 24). இவர் கடந்த 28.09.2019 அன்று வீட்டின் அருகில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் அருகில் இருந்த முள்வேலியில் கை வைத்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்த வள்ளி, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து, ஒசூர் சிப்காட் போலீசார், வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினார்கள்.
அதில் வள்ளியின் வீட்டிற்கு எதிரே உள்ள குடியிருப்புக்கு சென்ற மின்சார கம்பியை மற்றொரு வீட்டில் வசிக்கும் மின்ஊழியர் மரியதாஸ் (49), என்பவர், அந்த கம்பியை முள்கம்பி வேலியில் படும்படியாக கட்டி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மரியதாஸை போலீஸார், கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம்சாட்டப்பட்ட மரியதாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சுதா உத்தரவிட்டார்.