செய்திகள்

சிவாஜி நினைவிடத்தில் நடிகர் சங்கம் அஞ்சலி: நாசர்-பிரபு பங்கேற்பு

Published On 2018-07-21 09:15 GMT   |   Update On 2018-07-22 10:26 GMT
நடிகர் சிவாஜி கணேசனின் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி அடையாறில் அமைந்திருக்கும் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. #SivajiGanesan
சென்னை:

நடிகர் சிவாஜி கணேசனின் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி அடையாறில் அமைந்திருக்கும் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, நடிகர் சங்க தலைவர் நாசர், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், விக்ரம் பிரபு, நடிகர் மனோபாலா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

விழாவில் நடிகர் பிரபு பேசும்போது கூறியதாவது:-

‘நடிகர் சங்கம் சார்பாக அப்பாவுக்கு மரியாதை செலுத்தினார்கள். அவர்களை பார்க்கும்போது எங்களுக்கு எங்கள் தந்தை நினைவு வருகிறது. அவர்களுக்கு எங்களை பார்க்கும்போது எங்கள் தந்தை நினைவுக்கு வருகிறார்.

நாசர் என் தந்தையை அண்ணன் என்று அழைப்பார். நியாயமாக பார்த்தால் சித்தப்பா என்று அழைக்க வேண்டும். சிவாஜி எல்லோர் வீடுகளிலும் அப்பாவாக, தாத்தாவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

உங்கள் அனைவரையும் பார்க்கும்போது என் தந்தையே நேரில் வந்தது போல் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றிகள்’ என்று கூறினார்.


நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது ‘நேற்று இன்று என்று இல்லை எப்போதுமே சிவாஜி நம்முடன் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அவர் போட்ட தடத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அவர் பயணித்த அளவுக்கு நாங்கள் பயணிக்க முடியாது. சினிமா நடிகர்கள் மட்டும் அல்ல நாடக நடிகர்கள் சார்பாகவும் சிவாஜி பிறந்த தினத்தை அரசு நிகழ்ச்சியாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிவாஜி விமர்சனத்துக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டவர். கலைக்காகவே வாழ்ந்தவர்’

இவ்வறு அவர் கூறினார்.  #NadigarThilagam #SivajiGanesan
Tags:    

Similar News