செய்திகள்

வேட்டி அணிந்த பட இயக்குனருக்கு வணிக வளாகத்தில் அனுமதி மறுப்பு

Published On 2017-07-16 06:20 IST   |   Update On 2017-07-16 06:20:00 IST
வேட்டி அணிந்து வந்த பிரபல திரைப்பட இயக்குனரான அசிஷ் அவிகுந்தக் வணிக வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா:

பிரபல திரைப்பட இயக்குனரான அசிஷ் அவிகுந்தக் கொல்கத்தாவில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு நேற்று நடிகை தேவலீனா சென்னுடன் சென்றார். அப்போது அவிகுந்தக் வேட்டி அணிந்து இருந்தார். இதைப்பார்த்த வணிக வளாகத்தின் காவலாளிகள் அவரை மட்டும் நுழையவிடாமல் தடுத்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக வேட்டி கட்டியவர்கள் இங்கே நுழைய அனுமதி கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இயக்குனர் அசிஷ் அவிகுந்தக் இந்த சம்பவம் பற்றி முகநூலில் கண்டனம் தெரிவித்து எழுதினார்.

அதில், “பேண்ட், சட்டை அணிபவர்கள் மட்டுமே தனியார் பொழுதுபோக்கு விடுதிகளுக்குள் அனுமதிக்கப்படும் ஆங்கிலேயர் கால கலாசாரம் இன்றும் இருப்பது தெரிந்த விஷயம். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக வேட்டி அணிந்து சென்றால் வணிக வளாகத்துக்குள் அனுமதி கிடையாது என்பதை முதல்முறையாக இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நல்லவேளையாக நான் ஆங்கிலத்தில் விவாதித்து என்னை யார் என்று அடையாளப்படுத்திக் கொண்டதால் வணிக வளாக நிர்வாகிகள் உள்ளே செல்ல அனுமதித்தனர். கொல்கத்தா இவ்வளவு மோசமாகிவிடும் என்று நினைக்கவில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அவருடைய இந்த குற்றச்சாட்டு கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Similar News