செய்திகள்

எனக்கு மிரட்டல் விடுத்தவர் மீது அ.தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்கும்: ஆனந்தராஜ் பேட்டி

Published On 2016-12-30 06:59 GMT   |   Update On 2016-12-30 07:00 GMT
தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது அ.தி.மு.க. தொண்டராக இருந்தால் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என நடிகர் ஆனந்தராஜ் கூறினார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்ததையடுத்து அவர் வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தொண்டர்கள் விரும்பும் ஒருவர் வரவேண்டும் என்று கருத்து தெரிவித்த நட்சத்திர பேச்சாளர் ஆனந்தராஜ் நேற்று முன்தினம் அ.தி.மு.க.வில் இருந்து விலகினார். இதையடுத்து அவருக்கு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் ஆனந்தராஜ் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் எனக்கு ஒருவர் மிரட்டல் விடுத்தார். அவர் நிச்சயம் அ.தி.மு.க. தொண்டராக இருக்க மாட்டார். அவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவராக இருந்தால் கட்சி தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கும். தலைமை அவரை கண்டித்து வைக்க வேண்டும். இதை பெரிதாக்க நான் விரும்பவில்லை.

இதுபற்றி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளேன். மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும். காவல்துறையினர் தங்கள் கடமையை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் கட்சியை விட்டு விலகக்கூடாது என்று மிரட்டினால் என்ன சொல்வது? எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் விலகுகிறேன். தேவையில்லாமல் மிரட்டுவது போன்ற விஷயங்கள் வளர்ச்சிக்குரிய விஷயங்களாக தெரியவில்லை.

2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுங்கட்சி தலைமையை மிக கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். அந்த விமர்சனம் தரமான விமர்சனமாக இருந்தது.

அதேபோல் கட்சியில் சிறிய தவறுகூட செய்தது கிடையாது. யார் மீதும் குற்றம் சொன்னதும் கிடையாது. என்னைக் காயப்படுத்தியவர்களைக்கூட காட்டிக் கொடுத்தது கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News