செய்திகள்

உடல்நிலை குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி: நடிகர் செந்தில் பேட்டி

Published On 2016-05-07 13:17 IST   |   Update On 2016-05-07 13:19:00 IST
பிரபல காமெடி நடிகர் செந்தில் இறந்து விட்டதாக வாட்ஸ்-அப்பில் செய்திகள் பரவியது. இது குறித்து செந்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் செந்தில் தற்போது அ.தி.மு.க.விற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று திருச்சி மாவட்டத்தில் பிரசாரம் செய்து விட்டு இரவு திருச்சியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக வாட்ஸ்–அப்பில் தகவல் பரவியதால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருச்சியில் தங்கியிருந்த அவரை செல்போனில் தொடர்பு கொண்டு குடும்பத்தினர், நண்பர்கள் பேசினர். அப்போதுதான் நடிகர் செந்திலுக்கு விபரம் தெரிந்தது. அனைவரிடமும் அவர் நலமாக இருப்பதாக கூறினார்.

இது குறித்து செந்தில் கூறியதாவது:–

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேன். நேற்று திருச்சி மாவட்டத்தில் பிரசாரம் செய்தேன். இரவு 10 மணிக்கு பிரசாரத்தை முடித்து விட்டு திருச்சி ஓட்டலுக்கு திரும்பி கொண்டிருந்த போது இயக்குனர் உதயகுமார் என்னை தொடர்பு கொண்டார். வாட்ஸ் அப்பில் நான் இறந்து விட்டதாக தகவல் பரவுவதாக கூறினார்.

இதைக் கேட்ட போது எனக்கு பயங்கரமாக சிரிப்பு வந்தது. இரவு விடிய, விடிய வெளிநாடுகளிலிருந்தும், எனது உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் விசாரிப்புகள் வந்து கொண்டே இருந்தன. எனக்கு திருஷ்டி கழிந்து விட்டதாக நான் நினைக்கிறேன். என்னுடைய பிரசாரத்தை முடக்க இது போன்ற மலிவான வதந்திகளை வாட்ஸ் அப்புகளில் பரப்புகிறார்கள். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன்’ என்றார்.

Similar News