செய்திகள்
கோனா காரை துவங்கி வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னையில் எலெக்ட்ரிக் கார் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Published On 2019-07-24 13:08 IST   |   Update On 2019-07-24 13:08:00 IST
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எலெக்ட்ரிக் காரை தொடங்கி வைத்தார். புதிய கார் விவரங்களை பார்ப்போம்.



உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் நான்காவது விரிவாக்கத் திட்டத்திற்காக 7000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கூடுதலாக ஒரு லட்சம் கார்கள் உற்பத்தி செய்யவும், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்யவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் அடிப்படையில், ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் கோனா எலெக்ட்ரிக் எனும் எஸ்.யு.வி. காரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்து, வாகனத்தில் பயணம் செய்தார்.



இந்த எஸ்.யு.வி. கார் உயர் தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், 57 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட மின்கலன் பொருத்தப்பட்டு, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் சண்முகம் தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தொழில் துறை சிறப்புச் செயலாளர் அருண்ராய், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

வடம்- Movie Review