செய்திகள்
இந்தியாவில் புதிய ஹூன்டாய் வெர்னா வெளியிடப்பட்டது
ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வெர்னா மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய மாடலில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூன்டாய் வெர்னா 2017 ஒருவழியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வெளியான முதல் வெர்னா மாடல் அதிகளவு வரவேற்பை பெற்ற நிலையில் இம்முறை வெளியிடப்பட்டுள்ள புதிய காரில் அதிகப்படியான அம்சங்கள் மற்றும் அழகிய தோற்றம் கொண்டுள்ளது.
புதிய வெர்னா மாடலின் உள்கட்டமைப்புகளில் முந்தைய மாடல்களை விட அழகாக காட்சியளிக்கிறது. டேஷ்போர்டில் உள்ள டிஸ்ப்ளேக்களில் பிளாக் மற்றும் பெய்கீ என டூயல் டோன் கொண்டுள்ளது. புதிய காரில் 7.0 இன்ச் அர்கம் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஐ.பி.எஸ். பேனல், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர் லின்க் கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் இரண்டு யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 12 வோல்ட் சாக்கெட் மற்றும் யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. வெர்னா மாடல்களில் முதன்முறையாக வென்டிலேட்டெட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது, இது கோடை காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு வசதியான அம்சமாக இருக்கும்.
புதிய வெர்னா இகோ கோட்டிங் பெற்றிருக்கிறது என்பதால் காரினுள் கேபின் முழுக்க காற்றோட்டத்தை சீராக்குவதோடு நாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இத்துடன் பின்புறத்தில் திரை மற்றும் அதனை ஸ்மார்ட் டிரன்க் மூலம் கட்டுப்படுத்தும் வசதியை வழங்கியுள்ளது. இந்த அம்சம் காரை மேலும் ஆடம்பர தோற்றத்தை வழங்குகிறது.
லெதர் மூலம் தயாரிக்கப்பட்ட இருக்கைகள், அழகிய சன்ரூஃப், 6 ஏர்பேக்ஸ் மற்றும் பின்புற ஏ.சி. வென்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியில் புதிய கார் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் K2 தளம் சார்ந்த சூப்பர் பாடி வடிவமைப்பு உயர்-ரக ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், அதிக உறுதியாக இருக்கிறது.
ஹூன்டாய் புதிய வெர்னா 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இவ்வகை இன்ஜின் தலைசிறந்த செயல்திறனை கொண்டது என ஹூன்டாய் தெரிவித்துள்ளது. இதன் பெட்ரோல் மோட்டார் 120 bhp செயல்திறனும், டீசல் மோட்டார் 125 bhp செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு ஆட்டோ பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.