செய்திகள்
ஹோன்டா அமேஸ் 'பிரிவிலிஜ் எடிஷன்' இந்தியாவில் அறிமுகம்
ஹோன்டா கார் இந்தியா அமேஸ் 'பிரிவிலிஜ் எடிஷன்' மாடலினை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல் சிறப்பம்சங்கள் மற்றும் இன்ஜின் செயல்திறன் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஹோன்டா கார் இந்தியா புதிய அமேஸ் பிரிவிலிஜ் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. செடான் மாடல் காரின் பெட்ரோல் இன்ஜின் விலை ரூ.6.49 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. இதன் டீசல் மாடல் ரூ.7.73 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. எனினும் புதிய ஸ்பெஷல் எடிஷன் வாங்குவோர் கூடுதலாக ரூ.10,000 வரை செலுத்த வேண்டும்.
அமேஸ் பிரிவிலிஜ் எடிஷன் மாடலில் டிஜிபேட் என அழைக்கப்படும் 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யுனிட் வழங்கப்பட்டுள்ளது. இதன் டச் ஸ்கிரீன் யுனிட் 3டி சாட்டிலைட் லின்க் செய்யப்பட்ட நேவிகேஷன் அம்சத்தை வழங்குகிறது. இத்துடன் 1.5 ஜிபி அளவு மியூசிக் சேமிக்கும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
மிரர்லின்க் சப்போர்ட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியின் போது சீரான அனுபவத்தை வழங்குகிறது. இதனால் இமெயில் பிரவுசிங், லைவ் டிராஃபிக் மற்றும் வைபை ரிசீவர், இண்டர்நெட் வசதி, வாய்ஸ் கமாண்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர ப்ளூடூத், AM/FM டிஜிட்டல் ரேடியோ, எம்பி3 சப்போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், எச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது. புதியவகை இருக்கைகள் மற்றும் வெளிப்புற வடிவமைப்பில் சிறிதளவு மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் டூயல்-ஏர்-பேக்ஸ், ABS, ஓட்டுநர் இருக்கையின் உயரத்தை மாற்றும் வசதி, பின்புற பார்க்கிங் சென்சார்கள் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் உள்ள ஹோன்டா அமேஸ் போன்ற இன்ஜின் அமைப்பே புதிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மானிட்டர் 1.2-லிட்டர், 87bhp திறனை அதிகபட்சம் 109 Nm டார்கியூ வெளிப்படுத்தும் i-VTEC யுனிட் கொண்டுள்ளது. இதேபோன்று 1.5 லிட்டர் i-DTEC யுனிட் முலம் 99 bhp திறனை 200Nm டார்கியூவில் வழங்குகிறது. இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோன்டா அமேஸ் மாடலில் இதுவரை இல்லாதளவு புதிய மேம்படுத்தல்கள் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இந்த மாடல் 2018-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.