செய்திகள்

விலை குறைந்த பல்சர் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2018-10-27 12:56 GMT   |   Update On 2018-10-27 12:56 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 125 மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதன் இந்திய அறிமுகம் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #pulsar #motorcycle



இந்தியாவில் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பஜாஜ் நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது பல்சர். இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற சீறும் பைக் என்றும் இதை கூற முடியும். பல்சர் சீரிசில் பல மாடல்கள், மேம்படுத்தப்பட்ட ரகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் என்.எஸ். 125 மாடலை போலந்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய பல்சர் மாடலில் ஃபியூயல் இன்ஜக்‌ஷன் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இதில் இரட்டை இருக்கைகள் உள்ளன. இதில் சிங்கிள் சிலிண்டர் 4 வால்வு பியூயல் இன்ஜக்‌ஷன், ஏர் கூல்டு, DTSi 124.4 சி.சி. என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12 பி.ஹெச்.பி. @8,500 ஆர்.பி.எம். மற்றும் 11 நியூட்டன் மீட்டர் (என்.எம்.) டார்க் திறனை 6000 ஆர்.பி. எம்.மில் வெளிப்படுத்தக் கூடியது.



இதில் வழக்கமான டெலஸ்கோப்பிக் போர்க் உள்ளது. இதன் எடை 126.5 கிலோவாகும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மி.மீ. ஆகும். இதன் சக்கர அளவு 1,325 மி.மீ. ஆக உள்ளதாக போலந்தில் உள்ள பஜாஜ் நிறுவன விற்பனையகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இது அறிமுகமாகும்போது இதன் முந்தைய 135 எல்.எஸ். மாடலை விட இது சற்று விலை (ரூ. 62,528) அதிகமாக இருக்கும். போலந்தில் 7,999 போலிஷ் ஸ்லோடிக்கு விற்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ. 1.59 லட்சமாகும். ஆனால் இந்தியாவில் இந்த அளவுக்கு அதிக விலையை பஜாஜ் நிர்ணயிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அறிமுகம் ஆகும்போது ஏற்கனவே விற்பனையில் உள்ள பல்சர் 135 எல்.எஸ். மாடல் விற்பனையை நிறுவனம் நிறுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News