செய்திகள்
கோப்புப்படம்

பெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்

Published On 2018-10-15 05:05 GMT   |   Update On 2018-10-15 05:05 GMT
இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பேட்டரி வாகனங்களை வாங்க பலரும் முன்வருகின்றனர். #BatteryBike
பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்வதுதான் ஒரே தீர்வு என்கிற ரீதியில் அரசு, பேட்டரி வாகனங்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளது.

சுற்றுப் புறச்சூழலை பாதுகாக்கவும் இத்தகைய வாகனங்கள் பெருமளவு உதவும் என்பதால் அரசு இதற்கு மானியமும் வழங்குகிறது. நடுத்தர மக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களும், இப்போது பேட்டரியில் வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ரூ.10 செலவில், 70 கி.மீ. தூரம் ஓடுகின்றன என்றபோது, இத்தகைய பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் பற்றி அறிவது அவசியமாகிறது.

எதிர்காலத்தில் பேட்டரி வாகனங்கள்தான் என்ற நிலை உருவாகும் சூழல் வெகு தூரத்தில் இல்லை. எனவே இப்போது சந்தைக்கு வந்துள்ள பேட்டரி இரு சக்கர வாகனங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். தொழில்நுட்ப ரீதியில் இவை எவ்வாறு சிறப்பாக செயல்படுகின்றன என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் சிறந்த பேட்டரி வாகனத்தை வாங்க முடியும்.


ஏதெர் 450

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் புதிய தயாரிப்புதான் இந்த பேட்டரி ஸ்கூட்டர். இந்த நிறுவனம் தனியாருடன் கூட்டு சேர்ந்து சார்ஜிங் மையத்தையும் பெங்களூருவில் நிறுவி வருகிறது. இது 3.9 விநாடிகளில் 40 கி.மீ வேகத்தை எட்டும். இதன் முன்பகுதியில் 7 அங்குல தொடு திரை வசதி கொண்ட டேஷ் போர்டு உள்ளது.

இது வாகனம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டும். பேட்டரிக்கு 3 ஆண்டு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. விலை ரூ. 1.24 லட்சம். இதில் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும்.

ஹீரோ என்.ஒய்.எக்ஸ். இ5

இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கி.மீ ஆகும். இந்த ஸ்கூட்டரிலும் லித்தியம் அயன் ரக பேட்டரி தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பிரஷ் இல்லாத டி.சி. ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு இருக்கைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் நிலையில், பின்புற இருக்கையை மடித்துவிட்டு அதில் லோடு ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

பின் இருக்கையை மடித்து ஓட்டுபவர் முதுகுப்பகுதியில் சாய்ந்து கொள்ளலாம். இதன் பேட்டரிக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இதன் விலை ரூ.50,490. ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ. வரை பயணிக்கலாம். சார்ஜ் ஆக 4 மணி நேரம் ஆகும்.

ஒகினாவா பிரைஸ்

இந்தியன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினாவா இரண்டு பேட்டரி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. பிரைஸ் மற்றும் ரிட்ஜ் என்ற பெயரில் இவை அறிமுகம் ஆகியுள்ளன. இதில் ஒரு கி.மீ. தூரம் பயணிக்க 10 காசு மட்டுமே செலவாகும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது மூன்று கண்கவர் வண்ணங்களில் வெளிவந்துள்ளது.

பிரைஸ் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், நடுப்பகுதியில் லாக் செய்யும் வசதி, திருடு போவதை எச்சரிக்கும் அலாரம், பொத்தானை அழுத்தி ஸ்டார்ட் செய்யும் வசதி, ஸ்கூட்டர் இருக்குமிடம் அறியும் வசதிகள் உள்ளன.

மேலும் மொபைல் சார்ஜ் செய்வதற்கான போர்ட், தள்ளிச் செல்லும்போது உதவும் முன்புற, பின்புறம் சுழலும் வசதி, பகல் நேரங்களில் ஒளிரும் விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். இதன் விலை ரூ. 59,889. அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கி.மீ. ஆகும். பேட்டரி சார்ஜ் செய்தால் 170 கி.மீ. முதல் 200 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். சார்ஜ் ஆக 6 மணி முதல் 8 மணி நேரம் வரை ஆகும். #BatteryBike 
Tags:    

Similar News