செய்திகள்

தி.மு.க.-அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள்: தொல்.திருமாவளவன் அறிக்கை

Published On 2016-05-11 02:21 GMT   |   Update On 2016-05-11 04:07 GMT
தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் உள்ளன, அவற்றை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

5 முறை ஆண்ட தி.மு.க.வும், 3 முறை ஆண்ட அ.தி.மு.க.வும் கடந்த காலத்தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் அவர்கள் வெளியிட்ட வாக்குறுதிகளை முழுமையாக இரு கட்சிகளும் நிறைவேற்றியிருந்தாலே மக்கள் நல கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.

தற்போது கூட தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் உள்ளன. அவற்றை எல்லாம் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற அதிகார போதையில் இரு கட்சிகளும் தள்ளாடுகின்றன. எனவே தான், கடந்த காலங்களில் என்ன வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் கொடுத்தார்களோ அதையே திரும்பத்திரும்ப ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகளாக வெளியிட்டு வருகின்றனர். அப்படி என்றால், அவற்றை எல்லாம் நிறைவேற்றவில்லை என்றுதானே அர்த்தம்.

தற்போது, அவர்கள் கொடுக்கும் பொய்யான, கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. அதிகார போதையில் தள்ளாடும் இரு கட்சிகளுக்கும் மக்கள் தங்கள் மவுனப் புரட்சியின் மூலம் பாடம் கற்பிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News