செய்திகள்

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்தார்

Published On 2016-04-25 13:07 IST   |   Update On 2016-04-25 13:07:00 IST
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி திருவாரூர் தொகுதியில் இன்று தனது மனுவை தாக்கல் செய்தார்.
திருவாரூர்:

தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

நேற்றிரவு மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

இரவு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கினார். இன்று காலை 11 மணியளவில் அவர் காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பிற்பகல் 12.45 மணியளவில் அவர் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கோட்டாட்சியரும் திருவாரூர் தொகுதி தேர்தல் அதிகாரியுமான முத்து மீனாட்சியிடம் கருணாநிதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் முடிந்ததும் சன்னதி தெருவில் உள்ள வீட்டுக்கு சென்று ஓய்வு எடுக்கும் அவர் இரவு 7 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இரவு அங்கு தங்கும் அவர் நாளை (செவ்வாய்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு கொரடாச்சேரி, நீடாமங்கலத்தில் வேனில் இருந்தவாறு பிரசாரம் செய்கிறார்.

பின்னர் அவர் தஞ்சை வருகிறார். தஞ்சையில் நாளை மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். நாளை மறுநாள் அவர் திருச்சி புறப்பட்டு செல்கிறார்.

Similar News