செய்திகள்

கோவையில் இன்று ஜெயலலிதா பிரசாரம்

Published On 2016-05-01 05:54 GMT   |   Update On 2016-05-01 07:25 GMT
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

கோவை:

தமிழக சட்டசபைக்கு வருகிற 16–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார்.

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கேரள மாநிலத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.

இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பொதுக் கூட்ட மைதானத்துக்கு வந்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். கூட்டம் முடிந்ததும் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை செல்கிறார்.

பொதுக்கூட்டத்தை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு எதிரே சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவையில் மதியம் முதலே தொண்டர்கள் திரண்ட வண்ணம் இருந்தனர்.

பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து ஜெயலலிதா வரும் பாதை, மேடை அமைந்துள்ள இடம், பொதுக் கூட்ட மைதானம் ஆகிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் 5 ஐ.ஜி.க்கள் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News