சிறப்புக் கட்டுரைகள்
தலைமைப்பதவி தரும் தர்ம கர்மாதிபதி யோகம்-27
ஒரு ஜாதகத்தில் ஆண்டியையும் அரசனாக்குவது 5ம் இடம். இந்த இடத்தை பதவி ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று கூறுவார்கள்.
‘‘ஜனனி ஜென்ம சௌக்யானம் வர்தினி குல சம்பதாம்
பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்திரிகா’’
ஒருவருடைய ஜாதக புத்தகத்தை கையில் எடுத் தால் இந்த பாடல் எழுதி இருக்கும். அதன் பிறகே அந்த ஜாதகர் பிறந்த விபரம் பற்றிய குறிப்புகள் இருக்கும். இதன் பொருளானது. இந்த ஜாதகரின் பூர்வ புண்ணியத்தின் அடிப்படையிலே இந்த ஜாதகத்தின் பலன்கள் இருக்கும் என்பதாகும்.
ஒரு ஜாதகத்தில் ஆண்டியையும் அரசனாக்குவது 5ம் இடம். இந்த இடத்தை பதவி ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று கூறுவார்கள். ஒருவன் பெயரும் புகழுமாக இருந்தால், "புண்ணியவான்“ என்று கூறுவார்கள். புண்ணியம் செய்து இருந்தால், அதாவது போன ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருந்தால் இந்த ஜென்மத்தில் பாக்கியவானாக இருப்பான்.
கடந்து வந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருந்தால் இந்த ஜென்மத்தில் யோகம் நிச்சயம். அதாவது வங்கியில் பணம் இருந்தால் செக் பாஸ் ஆகும்.
ஒருவருக்கு வாழ்நாளில் அதிர்ஷ்டமோ, கடவுளின் அருளோ, கர்ம வினையோ எதுவாக இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடமே தீர்மானம் செய்கிறது. ஏனெனில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தான் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்து வினைகளும் பதிவாகியிருக்கும்.
சுய ஜாதகத்தில் 5-ம் இடம் பூர்வீக புண்ணிய ஸ்தானம் வலுத்திருந்தால் அதாவது அந்த வீட்டில் சுபர்கள் வீற்றி ருந்தால் அல்லது அந்த வீட்டுக்குடை யவன் உச்சம் பெற்றி ருந்தால், குரு பார்த்திருந்தால், அந்த வீட்டில் லக்கினாதிபதி யோகமாக அமர்ந்தி ருந்தால், அந்த வீட்டில் 6, 8,12-க்குடையவன், பாவிகள் அமராமல் இருந்தால் யோகசாலிகள்.
மனிதர்களாய் பிறந்த அனைவரும் உயர்ந்த பதவி, உத்தியோகம் அல்லது நிறைந்த தொழிலுடன் வாழ விரும்புவார்கள். சிலர் பிறக்கும் போதே செல்வம், செல்வாக்கு நிறைந்த குடும்பத்தில் பிறப்பார்கள். சிலருக்கு குலத்தொழில் கை கொடுக்கும். சிலர் படித்து முடித்தவுடன் வேலை, திருமணம், குழந்தை, வீடு, வாகனம் என விரைவில் குறுகிய காலத்தில் வாழ்க்கையில் செட்டிலாகி விடுவார்கள். சிலரின் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாற் றம் தரும்.
சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்து இழுபறியான வாழ்க்கையாகவே இருக்கும். வரவுக்கும் செலவிற் கும் பத்தாமல் உபரி பணத்தை கண்ணில் பார்க்க முடியாமல் சேமிக்க முடியாமல் வாழ்க்கை முடியும். சிலரின் வாழ்க்கை நிலையான தொழில், உத்தியோகம் இல்லாத நிலையில் இருக்கும். இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையிலும் பல்வேறு நடைமுறை சிக்கல் நிலவும். ஜோதிட ரீதியாக ஒருவர் வாழ்வதற்கும் வீழ்வதற்கும் அவரவரின் ஜாதக ரீதியான குரு, சனியின் நிலைகளே காரணம் ஆகும்.
குரு : பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவான் நவகிரகங்களில் முதன்மையான சுபகிரகமாவார். சுப கிரகங்களில் தலைமை கிரகமான குரு பகவான் மனிதர்கள் வாழ்வில் பல்வேறு உன்னதமான உணர்வுகளை உண்டாக்கக்கூடியவர். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். இவர் தனம், புத்திரம், பொருளாதார நிலை, கொடுக்கல் வாங்கல், பொதுக் காரியம், உயர்ந்த பதவி, அந்தஸ்தான உத்தியோகம், தலைமைப் பதவி, தெய்வீக விஷயங் கள், பூர்வ புண்ணியம் போன்றவற்றிற்கு காரகன். ஒருவர் ஜாதகத்தில் குரு பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும்.
சனி : கால கட்டத்தின் 10-ம் இடமான மகர ராசியின் அதிபதியான சனியே ஒருவரின் தலைமைப் பதவியை நிர்ணயம் செய்கிறார். சனிக்கு கர்ம காரகன் என்ற பெயரும் உண்டு. ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. ஒருவருக்கு யோக பலன்கள் அனுபவிக்க வேண்டிய அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஒருவருக்கு கெட்ட நேரம் வந்து விட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே கெட்டது எல்லாம் நடந்து முடிந்துவிடும்.
ஜனன கால ஜாதகத்தில் சனி நின்ற நிலைக்கு ஏற்பவே ஒருவருக்கு தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு. ஒரு ஜாதகத்தில் சனி பலமாக இருந்தால் மட்டுமே பதவி, உத்தி யோகம், தொழில் அனுகிரகம் உண்டு. சனி நல்ல நிலையில் இருந் தால் அடி தட்டில் இருந்து உழைத்து உயர்ந்தவர் களாக இருப்பார்கள். உழைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள். தேவைப்படும் இடத்தில் உழைப்பையும், புத்தி சாதுர்யத்தையும் ஒருங்கே பயன்படுத்துவார்கள்.
முதலாளியாக இருந்தால் கூட தொழிலாளி போல் உழைப்பவர்கள். சனி குறைந்த பாகையில் இருந்தால் சிறிய உழைப்பில் பெருத்த வருமானமும் அதிக பாகையில் இருந்தால் கடின உழைப்பில் சிறிய வருவாயும் இருக்கும். சனி பலம் குறைந்தால் அடிமைத் தொழில், கவுரவம் இல்லாத, நீசத்தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் நிரந்தரமற்ற தன்மை களையும், நோய் நொடிகளும், கஷ்டமான வாழ்வும் நிரம்பி இருக்கும்.
தர்மகர்மாதிபதி யோகம் : ஜோதிட சாஸ்திரத்தில் பல விதமான யோகங்கள் கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு மனிதன் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ முதல்தரமான யோகமாக கூறப்பட்டுள்ளது தர்ம கர்மாதிபதி யோகம். ஜோதிட ரீதியாக ஒருவரின் தலைமை பதவியை நிர்ணயம் செய்வதில் லக்னத் திற்கு ஒன்பதாம் இடமும், பத்தாம் இடமும் மிகவும் முக்கியமானதாகும்.
ஒன்பதாமிடத்தை தர்ம ஸ்தானம் என்றும் பத்தாம் இடத்தை கர்ம ஸ்தானம் என்றும் கூறலாம். அந்த இரு இடங்களுக்கும் உரிய வீட்டு அதிபர்களுக்குப் பெயர் தர்ம கர்ம அதிபதிகள். அவர்கள் இருவரின் சம்பந்தம் ஜாதகத்தில் எந்த விதத்தில் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமாகும். அந்த யோகம் பெற்றவர்கள் அதீதமான பொருள் ஈட்டுவார்கள்.
அவர்கள் இட்ட கட்டளைக்கு, வழிநடத்தலுக்கு எந்த எதிர்ப்புமின்றி அவரைச் சார்ந்தவர்கள் கட்டுப் படுவார்கள். ஒரு குடும்பத்தை, ஒரு இயக்கத்தை, ஒரு அணியை, ஒரு அலுவலகத்தை ஒரு ஊரை, மாநிலத்தை, நாட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்து திறம்பட நிர்வகிப்பார்கள்.
அவர்களின் முன்னோர்கள் தலைமுறை தலை முறையாக ஏராளமான தர்ம காரியங்களைச் செய் வார்கள். கோவில்களுக்குத் திருப்பணி செய்வது, இலவச மருத்துவமனைகள் கட்டுவது, பள்ளிகள், கல்லூரிகளைக் கட்டுவது, பெரிய அளவில் அடிக்கடி அன்னதானம் செய்வது, ஏழைகள்-எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார் கள். உயர்ந்த நிர்வாகப் பதவி வகிப்பார்கள்.
கால புருஷ தத்துவப்படி காலபுருஷ லக்னம் மேஷமாகும். அதற்கு ஒன்பதாம் வீடான தனுசு தர்ம ராசியாகும். பத்தாம் வீடான மகரம் கர்ம ராசியாகும்.கால புருஷ ஒன்பதாம் அதிபதி, தர்ம அதிபதியான குருவிற்கும் கர்மா அதிபதியான சனிக்கும் எந்த வகையில் சம்பந்தம் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமாகும். குரு+சனி சம்பந்தம் என்பது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப் படையில் ஏற்படுவதாகும்.
தர்மம் என்றால் ஒருவர் தனது செய்கையால் தன் குடும்பத்தினருக்கும், தன் சந்ததியினருக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் பாவ புண்ணியங்கள். கர்மம் என்றால் முன்னோர்கள் செய்த மற்றும் தான் செய்த, செய்யும் தொழில் மூலம் தன் வாரிசுகளுக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் பாவ புண்ணியங்கள்.
ஒருவருக்கு இந்த கிரக இணைவால் வாழ்நாள் முழுவதும் புண்ணிய பலன்கள் கிடைக்க ஜனன கால ஜாதகத்தில் குருவும் சனியும் சுப வலிமை பெற வேண்டும். நீசம், வக்ரம், அஸ்தமனமாகாமல் இருப்பதோடு அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந் தம் பெறாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு இருந்தால் நூறு சதவிகிதம் சுபத்தன் மையுடன் வரமாக செயல்படும். இக்கிரக சேர்க்கை இருப்பவர்கள் குடும்பமே கஷ்டப்பட்டாலும் ஜாதகர் மட்டும் எப்படியும் நல்ல நிலைமைக்கு வந்து விடுவார். இந்த குரு, சனி சம்பந்தம் பலருக்கு பெரிய திருப்பு முனையை தந்து இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்த கிரக சம்பந்தம் கூரை வீட்டில் வாழ்ந்தவரை கூட குபேரனாக மாற்றியுள்ளது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
இதில் குரு, சனி சேர்க்கை மற்றும் சம சப்தம பார்வை 100 சதவீதம் நற்பலன் தரும்.சனி மட்டும் குருவைப் பார்ப்பதும் குரு மட்டும் சனியை பார்ப்பதும் 50 சதவீதம் பலன் தரும். சனி, குருவை நோக்கி சென்றாலும் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். தர்மகர்மாதிபதி அமைப்பை பெற்றவர்கள் நாடாளும் யோகம் பெற்ற அரசியல்வாதிகளாக இருப்பார்கள். அரசு உத்தியோகத்தில் உயர் பதவியில் இருப்பார்கள். தனியார் நிறுவனத்தில் நிர்வாகப் பதவி வகிப்பார்கள். சுய தொழிலில் பிரபலமடைவார்கள்.
ஜனன கால ஜாதகத்தில் குருவும், சனியும் அஷ்டம பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்றாலும் நீசம், அஸ்தமனம் வக்ரம் பெற்றாலும் இந்த கிரக இணைவு அசுபத் தன்மையோடு சாபமாக பிரம்மஹத்தி தோஷமாகவும் செயல்படும். இவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை பயன்படுத்த முடியாது. குரு, சனி சேர்க்கையை செவ்வாய் பார்த்தாலும் அல்லது சேர்ந்தாலும் அந்த நபர் எவ்வளவு சம்பாதித்தாலும் தங்காது. அல்லது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இருக்காது.
வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கும். மன உழைச்சல் அதிகமாகிக் கொண்டே இருக்கும். ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் சுபத் தன்மையோடு செயல்பட்டால் சிறிய உழைப்பில் பெரும் பொருள் சேரும். அந்தஸ்தான, உயர்ந்த, கவுரவ பதவி வகிப்பார்கள். அசுபத் தன்மையோடு செயல்பட்டால் புகழ், அந்தஸ்து கவுரவம் பாதிக்கப் படும். வாழ்க்கைத் தரம் உயராது. குடும்ப உறுப்பி னர்கள் மதிக்க மாட்டார்கள். தலைமை பதவிகள் கிடைக்காது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இடர்கள் இருந்து கொண்டே இருக்கும்.
கட்சியின் அடிமட்ட தொண்டராகவே வாழ்வார் கள். சிறிய பொருளுக்கு கூட அதிகம் உழைக்க நேரும். உலகில் உள்ள அனைத்து இயக் கங்களுமே இரு வேறு எதிர்நிலைகளைக் கொண்ட மாறுபாடான சமன்பாடுகள் தான். இரவு-பகல், ஆண்-பெண், நன்மை-தீமை, இன்பம்-துன்பம் போன்றவைகளை உதாரணமாகக் கூறலாம்.
அதாவது இரவு இருந்தால்தானே அங்கு பகலுக்கு வேலை? உலகில் எல்லோருமே நல்லவர்களாக இருந்து விட்டால், எல்லாமே சுபமாக இருந்து விட்டால் உலகில் பிரச்சினைகளே இல்லையே. ஆக சுபமும் அசுபமும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டு எந்த பிரச்சினையும் நிரந்தரமானதல்ல என்ற எண்ணத்தை ஆன்மாவினுல் செலுத்த வேண்டும்.
அதாவது மன்னராட்சி முறை இருந்த அந்தக் காலத்தில் ஒரு குடியான வனுக்கு நாடாளும் அமைப்பு எனப்படும் அரச யோகம் இருந்தாலும் அவன் அரசனா வான் என்று சொல்லப்படவில்லை. அரச குலத்தைச் சேர்ந்தவனுக்கு மட்டுமே ராஜாவாகும் யோகம் இருப்பதாக குலத் தின் அடிப்படையில் பலன் சொல்லப்பட் டது. அது சரியாகவும் இருந்தது.
ஆனால் தற்காலத்தில் சாமான்யனும் முதல்வர் ஆகலாம் பிரதமர் ஆகலாம் என்ற ஜனநாயக முறை வந்துவிட்ட இந்தக் காலத்தில் ராஜயோக ஜாதக முடைய அமைப்பில் பிறந்த ஒருவருக்கு நாடாளும் யோகம் கிடைக்காது என்று பலன் சொல்ல முடியாது. எனவே உழைப்பால், முயற்சியால் அதிர்ஷ்டத்தை, தலைமைப் பதவியை அடைய முடியும் என்ற நம்பிக்கை மிக முக்கியம்.
மறைந்த நமது முன்னால் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் கூறிய ஒரு வாசகம். நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
ஒரு மனித ஆன்மா உலகை விட்டு செல்லும் போது சரித்திரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள். பெற்றோர்கள், முன்னோர்களினால் எந்த வழி காட்டலும் உதவியுமின்றி கஷ்டத்தைப் பார்த்து சிறு வயது முதல் சாதிக்க வேண்டும் என்ற வெறி யோடு சாதனையாளராக மாறி சரித்திரத்தில் இடம் பிடித்தவர்களின் பட்டியல் மிகப்பெரியது. என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற எதிர்மறை எண் ணத்தை மனதிலிருந்து அகற்றினால் வெற்றி உறுதி.
பரிகாரம் : ஜனன கால ஜாதக ரீதியாக குரு, சனி சம்பந்தம் அஷ்டமா பாதக ஸ்தானத்தோடு இணைந்து தலைமைப் பதவியில் சங்கடங்களை அனுபவிப்பவர்கள் வியாழக்கிழமை பகல் 12 முதல் 1 மணி வரையான சனி ஓரையில் 11 முதியவர்களுக்கு வஸ்திர தானம் வழங்கவும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரரை வழிபட் டால் தலைமைப் பதவி கிடைக்கும். ஜனன கால ஜாதக ரீதியாக குரு, சனி சம்பந்தம் இல்லாதவர்கள் வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணி வரை யான சனி ஓரையில் கால பைரவ அஷ்டகம் படித்து வர தலைமை பதவி தேடி வரும்.
ஆழ்மன எண்ணங்களை குறிக்கும் ஐந்தாம் இடத்தில் பொதிந்திருக்கும் கர்மாக்கள் எதுவானா லும் மனதின் வழியாகத்த்தான் வெளியில் வந்தாக வேண்டும். மனத்தின் சக்தியைப் பெருக்கி சரியான வழியில் மனத்தைப் பயன்படுத்தும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டால் கர்ம வினைகளைச் சர்வ சாதாரணமாய் வெல்லலாம்.