கடலூரில் வாக்காளர்களுக்கு கொடுக்க லாரியில் குடம் கடத்தல்: அ.தி.மு.க.–பா.ம.க. மோதல்
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் ஆக்கர் தெருவில் உள்ள ஒரு புதிய வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் மினிலாரி வந்து நின்றது. அந்த வீட்டில் இருந்த ஏராளமான பிளாஸ்டிக் குடங்களை சிலர் லாரியில் ஏற்றினர். அதை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அ.தி.மு.க.வினர் முயற்சி செய்வதாக பா.ம.க.வினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பா.ம.க.வினர் விரைந்து வந்து லாரியில் குடங்களை ஏற்றுவதை தடுத்தனர்.
மேலும் அந்த லாரி அங்கிருந்து செல்லாமல் இருக்க டயரில் இருந்த காற்றை பிடுங்கி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பா.ம.க. வேட்பாளர் பழ.தாமரைகண்ணன் ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். அ.தி.மு.க.வினரும் திரண்டனர்.
இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் ஏராளமான போலீசாரும் விரைந்து வந்தனர். இதற்கிடையே அந்த லாரி அங்கிருந்து கிளம்பியது. ஆனால் அதை தடுத்து நிறுத்த சம்பவ இடத்தில் இருந்த போலீசார் எந்தவித முயற்சியும் செய்யவில்லை. அந்த லாரியில் சென்ற அ.தி.மு.க.வினர் சற்று தூரத்தில் லாரியை நிறுத்தி விட்டு, காலி மனைக்குள் குடங்களை வீசியெறிந்து விட்டு லாரியை ஓட்டிச்சென்றனர்.
இதனால் பா.ம.க. வேட்பாளர் பழ.தாமரைகண்ணன் கோபமடைந்தார். போலீசாரிடம் லாரியை தப்ப விட்டது ஏன்? என்று கேட்டார். இதனால் அவருக்கும் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த தகவலை அறிந்த கடலூர் தாசில்தார் அன்பழகன் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது வேட்பாளர் தாமரைக்கண்ணன் அவரிடம் குடங்கள் இருந்த வீட்டுக்குள் சென்று சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். இதற்கு தாசில்தார் அன்பழகன் வருமானவரித்துறையினர் வந்தால் மட்டுமே நாங்கள் வீட்டிற்குள் சென்று சோதனை செய்ய முடியும் என்று தெரிவித்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே மக்கள் நல கூட்டணியினர் மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அங்கு இருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.
இதுபற்றி பா.ம.க. வேட்பாளர் பழ.தாமரைகண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடலூர் மஞ்சகுப்பம் ஆக்கர் தெருவில் உள்ள வீட்டில் இருந்து லாரி மூலம் கட்டுக்கட்டாக பணமூட்டைகளை லாரியில் அடுக்கி அதற்குமேல் காலிகுடங்கள் ஏற்றப்பட்டது. இது முழுவதும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்ல முயற்சி செய்தனர். அப்போது எங்கள் கட்சியினர் பார்த்து என்னிடம் தகவல் சொன்னார்கள். சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது போலீசார் உதவியுடன் அந்த லாரி அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றுள்ளது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டால் அவர்களுக்கு ஆதரவாகவும், எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சமயத்தில் வீட்டின் பின்வழியாக புதுவையில் இருந்து டெம்போ மற்றும் கார்கள் மூலம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பண மூட்டைகளை எந்தவித அச்சமும் இன்றி நிதானமாக கொண்டு சென்றுள்ளனர். இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் தெவித்தால் முறையான நடவடிக்கை இல்லை. இது குறித்து முழுமையான விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். என்றார்.
இதுகுறித்து தாசில்தார் அன்பழகனிடம் கேட்டபோது, லாரியையும், குடங்களையும் கைப்பற்றி உள்ளோம். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். என்று கூறினார்.