எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால் மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படும்: வைகோ பேச்சு
கடலூர்:
தே.மு.தி.க.–மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. சார்பில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் த.மா.கா. வேட்பாளர் வக்கீல் சந்திரசேகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ பேசியதாவது:–
ஜப்பான் நாட்டில் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படுவது போல், கடலூர் மாவட்டத்திலும் இயற்கை பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. தானே புயலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முந்திரி மரங்கள் அழிந்தன. பெரும் மழை வெள்ளத்தால் விவசாயிகள் அடித்து செல்லப்பட்டனர்.
அப்போது என்னுடைய தாயார் இறந்த நேரத்திலும், கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு வந்து எங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்தோம். கெடிலம் ஆற்றின் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டதால் தான் கடலூர் பாதிக்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முடிவடையவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி தருவோம். தேர்தல் அறிக்கையில் குறைந்த பட்ச செயல்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து உள்ளோம்.
எங்களின் தேர்தல் அறிக்கை ஒரு பிரம்மாஸ்திரம் ஆகும். தமிழ்நாட்டின் சரித்திரமாக எங்கள் தேர்தல் அறிக்கை உள்ளது. கிராமங்களில் சாலை வசதி முதல் நகரங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டுவது வரை தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் கமிஷன் வாங்குகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாலை முதல் பாலம் அமைக்கும் பணிகள் வரை நிபுணர்கள், ஓய்வு பெற்ற என்ஜினீயர்கள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்களை வைத்து ஆய்வு செய்வோம்.
சமூக ஆர்வலர்களை கொண்ட பொது தணிக்கைக்குழு அமைப்போம். இவர்கள் ஊழலை ஒழிப்பதுடன், சாலைகளை ஆய்வு செய்து அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைது செய்வோம்.
மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த பிறகு, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பயந்து வாழ்ந்து வருகிறார்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை பற்றி பேசும்போது சாதி பெயரை சொல்லி பேசவில்லை.
தொழில்கள் பற்றி பேசுகிற போது, நாதஸ்வரம் என்று சொன்னேன். இது பற்றி நான் விளக்கம், மன்னிப்பு கேட்டும், என் உருவ பொம்மைகளை 3 நாட்கள் தி.மு.க.வினர் எரித்தார்கள். தற்போது சாதி பெயரை சொல்லி பேசக்கூடாது என கண்டித்து எனக்கு தேர்தல் ஆணையம் தபால் அனுப்பி உள்ளது.
போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார். எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால் மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படும். ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்.
இந்த தேர்தலில் இளைஞர்கள், மாணவ– மாணவிகள்தான் மாற்றத்தை தர முடியும். 2016 தேர்தலில் அலைபேசி புரட்சி நடக்கும். 234 தொகுதிகளிலும் நம்முடைய வேட்பாளர்களிடம் வாக்குச்சாவடி (பூத்) செலவுக்கு பணம் கேட்காதீர்கள்.
இவ்வாறு வைகோ பேசினார்.