செய்திகள்

மதுபான ஆலைகளை மூட ஜெயலலிதா தயங்குவது ஏன்?: கனிமொழி கேள்வி

Published On 2016-04-25 10:18 IST   |   Update On 2016-04-25 10:18:00 IST
காஞ்சீபுரத்தில் கனிமொழி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேதும்போது மதுபான ஆலைகளை மூட ஜெயலலிதா தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

சென்னை:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

ஊரப்பாக்கம், மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனை ஆதரித்து கனிமொழி எம்.பி. பேசும்போது கூறியதாவது:–

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒருவரை தேர்வு செய்து முதல்வராக அமர வைத்தீர்கள். ஆனால், அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றினாரா? ஆனால், தலைவர் கலைஞர் கடந்த ஆட்சியின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டு தற்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அதனால் தான் தற்போது பொதுமக்கள் அனைவரும் தலைவரின் ஆட்சிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிலர் மது ஆலைகளை நடத்தி வருகின்றனர். அவற்றை மூடலாமே என்று ஜெயலலிதா கேள்வி கேட்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போது மதுக்கடைகளை மூடாமல் தற்போது படிப் படியாக மூடுவேன் என்று கூறி வருகிறார். அப்படியானால் மிடாஸ் ஆலையை மூட ஜெயலலிதா தயக்கம் காட்டுவது ஏன்?

கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதிகளில் சாலைகள் போடப்பட்டதா? தேர்தல் வருவதையொட்டி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக சாலைகள் போடப்பட்டு வருகின்றன. மக்களுக்காக எந்த செயல் திட்டத்தையும் செயல்படுத்தாத அரசை தூக்கியெறிய நேரம் வந்து விட்டது. மே.16–ந்தேதி நடைபெறும் தேர்தலின் போது பொதுமக்களாகிய நீங்கள் வாக்கு என்ற துருப்புச் சீட்டை பயன்படுத்தி அ.தி.மு.க. அரசை தூக்கியெறியுங்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் பெய்த மழைக்கு காரணம் இயற்கையாக இருக்கலாம். ஆனால், வெள்ளம் செயற்கையாக வந்தது.

செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் நள்ளிரவில் பொதுமக்கள் தூங்கும் நேரத்தில் எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த பொருள்கள், மாணவர்களின் பாடப் புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சென்னை மாநகரமே ஸ்தம்பித்து. மக்களை காப்பாற்றுவதற்காக வந்த உதவிகளை பயன் படுத்திக் கொள்ள அரசு முன்வரவில்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற வந்த மத்திய அரசின் கப்பல் படைக்கு எங்கு செல்ல வேண்டும் என்று தெரியவில்லை. அதற்கான வழிகாட்டுதலைக் கூட வழங்க தமிழக அரசு தவறிவிட்டது.

ஆனால், தன்னார்வ அமைப்புகளால் வழங்கப்பட்ட பொருள்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டுமே குறியாக இருந்தது. வெள்ளப் பாதிப்பு குறித்து எதுவும் கவலைப்படாமல் வாட்ஸ்அப்பில் ஆறுதல் கூறி விட்டு ஹெலிகாப்டர் மூலம் சேதப்பகுதிகளை பார்வையிட்டவர்தான் இந்த ஜெயலலிதா. வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்றார். அதுவும் முறையாக வழங்கப்படவில்லை.

இப்படி மனிதபிமானமே இல்லாமல் மக்களை நடத்துபவரை பொதுமக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. காணொலிக் காட்சியாக இருந்த அரசு கடந்த ஓராண்டில் ஸ்டிக்கர் ஆட்சிக்கு மாறியதுதான் சாதனை.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ரேசன் கடைகளில் எந்தப் பொருள்களும் கிடைப்பதில்லை. ரேசன் அட்டை கூட வழங்கப்படவில்லை.

இதனால் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர் விண்ணப்பித்த 15 நாள்களில் ரேசன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கப்படும். பொருள்கள் சரியான எடை அளவில் வழங்கப்படுவதை உறுதி செய்ய பொட்டலங்களில் (பாக்கெட்கள்) வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும். மறைமலை நகர், செங்கல்பட்டு பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

Similar News