செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் அக்டோபரில் நடைபெற வாய்ப்பு- ஆர்.எஸ்.பாரதி

Published On 2018-08-01 05:14 GMT   |   Update On 2018-08-01 05:14 GMT
கோர்ட்டு உத்தரவு காரணமாக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார். #HighCourt #CivicPolls #RSBharathi
சென்னை:

கோர்ட்டு உத்தரவு காரணமாக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார்.

இது குறித்து அவர் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் அண்டு அக்டோபர் மாதம் முறையாக தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் மாநில தேர்தல் ஆணையம் எஸ்.டி.பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை ஒதுக்காமல் தேர்தல் நடத்த முற்பட்டதால் அதை சரி செய்து தேர்தலை நடத்துமாறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம்.

பின்னர் இதை ஒழுங்குப்படுத்திய தேர்தல் ஆணையம் வார்டு மறுவரையறை செய்து தேர்தல் நடத்துவதாக கூறியது. அதன் பிறகு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடிவடையவில்லை என்று தேர்தல் ஆணையம் காரணம் கூறியது.

இப்படி ஒவ்வொரு முறை வழக்கு வரும் போதெல்லாம் காரணம் கூறி தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வந்தனர்.


கடந்த முறை இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி முன்பு விசாரணைக்கு வந்தபோது 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிட்டு நவம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவும் பின்பற்றப்படவில்லை.

இதனால்தான் தி.மு.க. சார்பில் நாங்கள் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

தேர்தல் அட்டவணையை 6-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும், இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே இந்த சூழ்நிலையில் அக்டோபர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யும் என்று நம்புகிறேன்.

கோர்ட்டில் தேர்தல் ஆணையம் மேலும் கால அவகாசம் கேட்டால் அதை கோர்ட்டு ஏற்றுக்கொள்ளாது. எனவே தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்திதான் ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #HighCourt #CivicPolls #RSBharathi
Tags:    

Similar News