செய்திகள்

தி.மு.க.வில் நான் இல்லாமல் இருந்திருந்தால் உயிரோடு இருந்திருக்கமாட்டேன் - ஆ.ராசா

Published On 2018-05-02 06:11 GMT   |   Update On 2018-05-02 06:12 GMT
திராவிட இயக்கத்தில் நான் இல்லாமல் இருந்திருந்தால் 2ஜி வழக்கால் நான் உயிரோடு இருந்திருக்கமாட்டேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார். #DMK #ARaja #2gcase

திருச்சி:

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் 2ஜி வழக்கு பற்றிய ஆய்வரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் எல்லா நிறுவனங்களும் எனக்கு எதிராகவே செயல்பட்டன. உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் என எதுவாக இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பின் வாதம் கேட்கப்படுவது வழக்கம். மற்ற எல்லா வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவரின் வாதம் ஏற்கப்பட்டது.

ஆனால்2ஜி வழக்கில் யார் மீது குற்றம் சாட்டப்பட்டதோ, அவரின் தரப்பு வாதத்தை கேட்காத உச்சநீதிமன்றம், மத்திய தலைமை கணக்காயர் அறிக்கையை வைத்தே உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டது. அதை நான் எதிர்த்தேன். என்னுடைய வாதத்தை கேட்கவில்லை.

தனி மனிதனான என்னை குறி வைத்தே 2ஜி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கால் தி.மு.க. எதிர் கொண்ட பிரச்சினைகள் குறித்து எதிர்கால சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நூலை நான் எழுதினேன்.

திராவிட இயக்கத்தில் நான் இல்லாமல் இருந்திருந்தால் 2ஜி வழக்கால் நான் உயிரோடு இருந்திருக்கமாட்டேன். 2ஜி வழக்கு குறித்த முழு விவரத்தையும் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்தேன். அன்றில் இருந்து வழக்கு முடியும் வரை அவர் உறுதுணையாக எனக்கு இருந்தார்.

2ஜி வழக்கு தவறாக சித்தரிக்கப்பட்டது. 2ஜி அவிழும் உண்மைகள் என்ற இந்த நூலில் நான் எழுதியவற்றை இதுவரையிலும் யாரும் மறுக்கவில்லை. தனி மனிதன் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கின் காரணமாக மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் தி.மு.க.வும் ஆட்சியை இழந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு எம்.எல்.ஏ., கவிஞர் நந்தலாலா, திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் வக்கீல் அருள்மொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், எம்.எல்.ஏ.க் கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் பெரிய சாமி, கே.என்.சேகரன், பரணி குமார், மாநகர தி.மு.க. செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #ARaja #2gcase

Tags:    

Similar News