செய்திகள்

ஓ.பி.எஸ்.-எடப்பாடிக்கு இடையே கருத்து வேறுபாடு: திருநாவுக்கரசர்

Published On 2018-02-20 12:47 IST   |   Update On 2018-02-20 12:47:00 IST
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்று சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் கூறினார்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலவரம் குறித்து பேசுவதற்கு டெல்லி செல்கிறேன். அது வழக்கமான ஒன்று. ஏற்கனவே விஜயதாரணி விவகாரம் குறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. தற்போது அவர் எந்த கருத்தும் கூறவில்லை. அதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை.

அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். அனைத்து கட்சி தலைவர்களை அழைத்தது போல விவசாய சங்க தலைவர்களையும் அழைக்க வேண்டும். அவர்கள் காவிரி நதிநீர் பிரச்சனைக்காக போராட்டங்கள் நடத்தி உள்ளனர்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. வீதியில் நடந்து செல்லும் தாய்மார்களிடம் செயின்பறிப்பு அதிகரித்துள்ளது.

சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை முழுவீச்சில் செயல்பட வேண்டும்.


தமிழகத்தில் தீவிரவாத பயிற்சி நடைபெறுவதாக தீவிரவாதம் ஊடுருவல் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் கூறி உள்ளார்.

மத்திய அமைச்சராக இருப்பவர் ஒருவர் சொல்லி இருக்கிறார். எந்த தீவிரவாத அமைப்பு ஊடுருவி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

பிரதமர் மோடி தமிழகம் வந்து மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய நலத்திட்டங்களை அறிவிக்கட்டும். பிரதமர் மோடி கலந்து கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் வங்கியில் மோசடி செய்த நிரவ்மோடி பங்கேற்றுள்ளார்.

பெரிய நிறுவனங்கள் எல்லாம் வங்கியில் பணத்தை பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்று சவுரியமான வாழ்க்கை வாழ்கிறார்கள். இதற்கு மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமல்ஹாசன், தி.மு.க. தலைவர் கருணாநிதி, நல்லக்கண்ணு, ரஜினி, விஜயகாந்த் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து இருக்கிறார். அதில் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

கமல்-ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.

அ.தி.மு.க. உடைந்து இருக்கிறது. அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.

அ.தி.மு.க.வை இணைப்பதற்கு பிரதமர் மோடி கட்டபஞ்சாயத்து செய்தார் என்று காங்கிரஸ் கூறி இருந்தது. தற்போது ஓ.பன்னீர் செல்வத்தின் பேச்சு அதை நிரூபித்து விட்டது. பா.ஜனதா, மோடி, மத்திய அரசு இவர்கள்தான் மறைமுகமாக அ.தி.மு.க.வை நடத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Similar News