செய்திகள்

ஆர்.கே.நகர் தோல்வியால் மு.க.ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார்: தினகரன் பேட்டி

Published On 2018-01-28 06:34 GMT   |   Update On 2018-01-28 06:34 GMT
ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியால் மு.க.ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. இன்று கும்பகோணம் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் பா.ஜனதாவில் சேர போவதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். நான் பா.ஜனதாவில் சேருகிறேனா இல்லையா? என்று அவருக்கு எப்படி தெரியும்.

ஆர்.கே.நகர் தேர்தலின் போது நான் சுயேட்சையாக போட்டியிட்டேன். என்னை குறை கூறி கொண்டு மக்கள் மனதை புரிந்து கொள்ளாமல் செயல் தலைவர் தவறான கணக்கு போட்டதனால் தான் தி.மு.க. டெபாசிட் கூட வாங்கவில்லை. நான் எந்த கட்சியும் இல்லை. ஆனால் 70 வருட கட்சி என்று கூறி கொண்டு மு.க.ஸ்டாலின் என்னை கண்டு பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி விரக்தியில் அவர் என்ன என்னவோ குற்றம்சாட்டி பேசி வருகிறார். அவருடைய கட்சி தொண்டர்களுக்கே அவரின் செயல்பாடுகள் பிடிக்காமல் குழம்பி போய் உள்ளனர்.

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். காவிரி நதி நீர் ஆணையம், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் மத்திய அரசு முனைப்பு காட்டாமல் உள்ளது. ஆனால் முத்தலாக் விவகாரத்திலும், ஹஜ் பயணம் மானியம் ரத்து விவகாரத்திலும் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது ஏன் என்று தெரியவில்லை. கர்நாடக தேர்தலை மனதில் வைத்து கொண்டு மத்திய அரசு ஒரு தலை பட்சமாக செயல்பட்டு வருகிறது.

வாக்கு வங்கி அரசியலை மட்டும் கருத்தில் கொண்டு பெரும் பான்மை மக்களையும், சிறுபான்மை மக்களையும் சாதி, மத, சமயம் என பிரித்து பார்த்து வாக்கு சேகரிப்பது எங்களது கொள்கை அல்ல. அனைத்து தரப்பு மக்களிடமும் நாங்கள் வெற்றி பெற்றாலும், தோல்வி கண்டாலும் ஒரே மாதிரியாக இருப்பது தான் எங்கள் கொள்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News