எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்து தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: கனகராஜ் எம்.எல்.ஏ.
கோவை:
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் கூறியதாவது:-
கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது நாங்கள் அனைவரும் சேர்ந்து தினகரனுக்காக தொப்பி சின்னத்தில் ஓட்டு கேட்டோம். ஆனால் தற்போது நாங்கள் அதே ஆர்.கே.நகரில் தினகரனை எதிர்த்து இரட்டை சிலை சின்னத்தில் ஓட்டு கேட்டோம்.
நான் வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் இதைபற்றி தான் என்னிடம் கேட்டார்கள். அவர்களிடம் நாங்கள் சின்னம் கிடைத்ததை கூறி வாக்குகேட்டோம். மாறி, மாறி ஓட்டு கேட்டதால் எங்கள் பிரசாரம் எடுபடாமல் போய் விட்டது.
தினகரன் தி.மு.க.வுடன் கூட்டுசதி செய்து ஜெயித்து விட்டார் என கூறுவதை ஏற்க முடியாது. தி.மு.க.வை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் அ.தி.மு.க. வெற்றி பெறும். தினகரனுக்கு 2-வது இடம் தான் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் தினகரன் வெற்றி பெற்று விட்டார். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
இந்த ஆட்சி 2 மாதத்தில் கலையும் என தினகரன் கூறி இருப்பது அவரது விருப்பம். அம்மாவின் ஆட்சி நிலைக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்து தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அம்மா கொடுத்த அதே மரியாதையை தினகரனும் கொடுக்க வேண்டும். இந்த ஆட்சி நிலைத்து, அம்மாவின் கனவை நனவாக்க வேண்டும். இது தான் என்னை போன்ற நடுநிலையாளர்களின் விருப்பமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.