செய்திகள்

பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

Published On 2017-11-29 09:21 GMT   |   Update On 2017-11-29 09:21 GMT
பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முகாமிட்டு வெற்றிவேல் கட்சி பணிகளை செய்யக்கூடும் என்று கருதியதால் சட்டமன்ற அலுவலகத்துக்கு நேற்றிரவு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பெரம்பூர்:

சென்னை பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.வெற்றிவேல். சசிகலாவின் தீவிர ஆதரவாளரான இவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்பட்டார்.

அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்த போது அவர் தினகரன் தலைமையிலான அம்மா அணியில் முக்கிய பங்கு வகித்தார். டி.டி.வி.தினகரனின் 18 ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் வெற்றிவேலும் ஒருவர் ஆவார்.

கவர்னரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதாக கூறியுள்ளார். அவரது ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ.தான் தேர்தல் பொறுப்பாளராக கடந்த முறை செயல்பட்டார். இந்த முறையும் அவர் தலைமையில் தேர்தல் பணி செய்ய தினகரன் முடிவு செய்தார்.

இப்போதே ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் அந்த தொகுதியில் கட்சி முழுமையாக பணியாற்ற முடியுமா என்ற சந்தேகம் அனைத்து கட்சிகளுக்கும் எழுந்துள்ளது.

பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முகாமிட்டு வெற்றிவேல் கட்சி பணிகளை செய்யக்கூடும் என்று கருதியதால் சட்டமன்ற அலுவலகத்துக்கு நேற்றிரவு சீல் வைத்தனர். அவரது அலுவலகம் மற்றும் சுற்றுச்சுவர் கேட்டை பூட்டி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News