இரட்டை இலை சின்னத்தை சூழ்ச்சியால் இழந்தோம்: டி.டி.வி.தினகரன்
ஈரோடு:
அ.தி.மு.க. அம்மா அணி பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் சேலத்திலிருந்து கோவை செல்லும் வழியில் ஈரோடு மாவட்டம் சித்தோடு வந்தார்.
அங்கு தினகரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் திறந்த காரில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
இந்த ஆட்சி குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் உள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கத்துக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ், மதுசூதனன், செம்மலை ஆகியோரின் சூழ்ச்சிதான் காரணம்.
மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. நியாயமாக பார்த்தால் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு தான் கொடுக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு கட்சியில் எந்த அதிகாரமும் கிடையாது, பொது செயலாளருக்கு மட்டும்தான் அதிகாரம் உண்டு. இரட்டை இலைலை மீட்போம், மீட்க நீதிமன்றத்தை அணுகுவோம்.
வருமான வரி துறையினர் எந்த வழக்கு போட்டாலும் அதை எதிர்கொள்வேன். உண்மையான அம்மாவின் விசுவாச தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர். துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சியை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன். இந்த ஆட்சியின் அவலத்தை தமிழக மக்கள் வெகு நாளாக தாங்க மாட்டார்கள். விரைவில் பொங்கி எழுவார்கள் அப்போது இந்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ் போன்றவர்கள் எல்லாம் இருக்கும் இடம் இல்லாமல் காணாமல் போய் விடுவார்கள்.
ஆர்.கே.நகர் தேர்தலை சந்திப்பது குறித்து பொதுச்செயலாளர் சசிகலாவிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரையும் வீட்டுக்கு அனுப்பாமல் ஓயமாட்டோம். இனிமேல்தான் ஓ.பி.எஸ் நிலைமை என்ன ஆகும்? என தெரிய வரும். அதை நீங்களே பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு தினகரன் பேசினார்.
முன்னதாக சித்தோடு நால்ரோட்டில் மாநகர மாவட்ட செயலாளர் பருவாச்சி பரணீதரன் தலைமையில் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம், காசிபாளையம் பகுதி செயலாளர் மோகன்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் தினகரனை வரவேற்றார்கள்.