செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் 100 பேர் வெளிநாடு செல்ல ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2017-11-21 15:26 IST   |   Update On 2017-11-21 15:26:00 IST
தமிழகத்தில் மிக விரைவில் அரசு பள்ளியில் பயிலும் திறமை மிக்க 100 மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளுக்கு குழுக்களாக பிரித்து அனுப்ப உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தாம்பரம்:

பல்லாவரம் மற்றும் அனகாபுத்தூரில் உள்ள அரசு பள்ளிகளில் புதிய கட்டிடத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மிக விரைவில் அரசு பள்ளியில் பயிலும் திறமை மிக்க 100 மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், நார்வே, பிரான்சு போன்ற நாடுகளுக்கு குழுக்களாக பிரித்து அனுப்ப உள்ளோம்.

அப்போது அந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், வளர்ச்சி, கல்வி, புதிய கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

இதற்காக ஆண்டு தோறும் ரூ.3 கோடி செலவிடப்படும். 15 நாட்களுக்கு மாணவர்கள் வெளிநாடு அழைத்து செல்லப்படுவார்கள்.

தமிழ்வழி கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டு தோறும் காமராஜர் பிறந்த நாளில் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

மாவட்டந்தோறும் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் 15 பேரும், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 15 பேரும் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 960 பேர் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆண்டு தோறும் ரூ.1 கோடியே 42 லட்சம் ஒதுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News