செய்திகள்

அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: அன்புமணி ராமதாஸ்

Published On 2017-11-16 16:15 IST   |   Update On 2017-11-16 16:15:00 IST
தமிழக கவர்னர் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள கங்காபுரம் டெக்ஸ்வேலியில் இன்று சர்வதேச சதுரங்க போட்டி தொடங்கியது.

இதில் பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு போட்டியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக மீனவர்களை இந்திய கடற்படையே துப்பாக்கியால் சுடும் சம்பவம் நடக்கிறது. அவர்கள் என்ன சொன்னாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு எங்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. அவர்களின் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும்.

இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசும் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. தமிழக கவர்னர் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கவர்னருக்கு என சில அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கவர்னர் மாளிகைக்கு வரவழைத்து விசாரிக்கலாம். ஆலோசிக்கலாம். அதை விட்டு நிர்வாக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வது உகந்தது அல்ல.

மேலும் கவர்னர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று ஆய்வு செய்வேன் என்று கூறி உள்ளார். அவ்வாறு அவர் செய்தால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 18 எம்.எல்.ஏ.க்கள் இந்த அரசுக்கு எதிராக மனு கொடுத்துள்ளனர். கவர்னர் முதலில் இந்த மனுவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கட்டும்.

அதைவிட்டு அரசு நிர்வாகத்தில் அவர் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அமைச்சர்களுக்கு பதவி மட்டும்தான் முக்கியம். அதற்காக அவர்கள் எதுவும் செய்வார்கள். இதன்மூலம் இந்த அரசு ஒவ்வொரு உரிமைகளையும் இழந்து வருகிறது.


சசிகலா ஆதரவாளர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியது தாமதமான நடவடிக்கை.

இந்த சமயத்தில் இன்னொன்றையும் கேட்டுக்கொள்கிறேன். சசிகலாவுக்கு பல்வேறு வகைகளில் பணம் பெற்றுக்கொடுத்த ஓ.பி.எஸ். (துணை முதல்வர்), இ.பி.எஸ். (முதல்வர்) வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வேண்டும்.

பாரதிய ஜனதா அரசு பல்வேறு வாக்குறுதிகளை கூறி இருந்தது. ஆனால் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Similar News