செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தாமதமாவதற்கு தி.மு.க.வே காரணம்: எச்.ராஜா

Published On 2017-10-28 09:48 IST   |   Update On 2017-10-28 09:48:00 IST
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தாமதமாவதற்கு தி.மு.க.வே காரணம் என அறந்தாங்கியில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பா.ஜ.க. தேசிய செயலாளரும் இந்திய ரெயில்வே பயணிகள் நல மேம்பாட்டுக்குழு தலைவருமான எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளக்ஸ் போர்டுகள் வைப்பது தொடர்பான கோர்ட் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. இருப்பவர் படம் வைக்கக்கூடாது இறந்தவர் படம் வைக்கலாம் என்பது சரியாக இல்லை.

கருவேலமரம் கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அகற்றப்படவேண்டும் என்று தென் தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. பணிகளும் நடந்தன. ஆனால் சென்னை கோர்ட்டு அது குறித்து தடை அறிவித்தது. அதனால் கோர்ட்டு தீர்ப்பு என்பது மக்கள் மதிப்பதாக இருக்கவேண்டும். முதலில் ஒரு அறிவிப்பு, பிறகு ஒரு அறிவிப்பு சரியானதாக இல்லை.

நெல்லையில் கந்துவட்டி காரணமாக ஒரு குடும்பத் தினர் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தீ வைத்து கொண்ட கொடுமை பார்க்க முடியவில்லை. மனம் வேதனைப்படுகிறது. கந்து வட்டி இறப்புக்கு பிறகு மாநில அரசு கந்து வட்டி தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெங்கு போன்ற கொடிய நோய்களில் இருந்து காப்பாற்றத்தான் மத்திய அரசு 2014ல் தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் நோக்கமே சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பது தான். தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் அறிந்து சரியாக செயல்படுத்தி இருந்தால், தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு இந்த அளவில் இருந்து இருக்காது. தற்போது டெங்கு ஒழிப்பு பணியின் போது தூய்மை இந்தியா திட்டம்போல சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை அனைவரும் உணர வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் உட்பட தமிழகத்தில் மற்றும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இருநாட்டு அரசுகளும் தொடர்ந்து பேசி வருகிறது. மேலும் விரைவில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்.


ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து தி.மு.க. சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. தி.மு.க. வழக்கை வாபஸ் பெற்றால் தேர்தல் குறித்து அறிவிப்பு வரும். வாபஸ்பெறவேண்டும் என்று நான் கூறவில்லை. இருப்பினும் ஒரு வழக்கு இருக்கும் போது ஒரு அறிவிப்பு என்பது வருவது தாமதமாகத்தான் இருக்கும்.

நடைபெறவுள்ள குஜராத் தேர்தலில் மக்கள் ஆதரவு நல்லபடியாக உள்ளது. அதனால் பா.ஜ.க.விற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பாஜக. மாநில செயற்குழு உறுப்பினர் செல்வக்குமார், முன்னாள் நகரசபை துணைத் தலைவர் முரளிதரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News