செய்திகள்

மக்களின் இன்னல் பற்றி கவலை இல்லாத இந்த ஆட்சி நிலைத்து நிற்காது: மு.க.ஸ்டாலின்

Published On 2017-10-01 14:12 IST   |   Update On 2017-10-01 14:12:00 IST
மக்களின் இன்னல் பற்றி கவலை இல்லாத இந்த ஆட்சி நிலைத்து நிற்காது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அ.தி.மு.க. அரசு எதற்கும் லாயக்கற்றது. அவர்கள் பதவி அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு கமி‌ஷன் வாங்க நடத்தப்படுகிற ஆட்சி. மக்கள் படும் இன்னல்கள் பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாத அரசு.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்கள் வரி பணமான அரசு பணத்தை நியாயமாக செலவு செய்கிறார்களா? உண்மையில் எம்.ஜி.ஆரின் புகழுக்காக நடைபெற்று இருந்தால் விமர்சிக்க மாட்டோம்.

உட் கட்சி விவகாரங்கள், எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்வதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வருகின்றன. அரசு நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்து வரக் கூடாது என்று நீதிமன்றம் உத்தர விட்ட பிறகும் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் அவர்களது பள்ளி வாகனத்தில் அழைத்து வரப்பட்டுள்ளன. எந்த வகையிலும் இந்த ஆட்சி நீடித்து நிலைத்து இருக்காது.

ஏற்கனவே இருந்த கவர்னர் போல் இல்லாமல் தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய கவர்னர் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை புரிந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிவாஜி மணி மண்டபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பெயரை அகற்றி உள்ளனர். கடற்கரையில் இருந்து சிவாஜி சிலையை அவர்கள் அப்புறப்படுத்தியது ஏன்? என்று அனைவருக்கும் தெரியும். கலைஞருடைய பெயர் ஜெயலலிதாவுக்கு முதலில் உறுத்தியது. தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும், அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு உறுத்தி உள்ளது. அதனால் தான் சிலையை அங்கிருந்து அகற்றினார்கள். ஜெயலலிதா பெயரை பொறிப்பதற்காக சிவாஜி சிலை கடற்கரையில் இருந்து அகற்றப்பட்டது.

கலைஞர் தலைமையில் 2006-11 வரை மைனாரிட்டியாக இருந்த தி.மு.க. அரசு காங்கிரஸ் மற்றும் பா.ம.க.வுடன் கூட்டணி வைத்து தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்தியது. தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களுடைய எம்.எல்.ஏ.க்களே கவர்னரை சந்தித்து மனு கொடுத்து உள்ளனர். அவர்கள் தான் மைனாரிட்டி அரசு. எங்களை பார்த்து அவர்கள் மைனாரிட்டி என்று சொல்வதா? இது திரிசங்கு ஆட்சி.

நான் அ.தி.மு.க. அமைச்சர்களை போல் கற்பனை செய்து கனவு காண்பவன் அல்ல. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுவோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Similar News