செய்திகள்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக முதல்-அமைச்சர் அணி சார்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல்

Published On 2017-09-29 13:36 IST   |   Update On 2017-09-29 13:36:00 IST
இரட்டை இலை சின்னம் தொடர்பாக முதல்-அமைச்சர் பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
 
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அக்கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது.

இரட்டை இலை சின்னத்தை பெறும் முயற்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய அணியும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணியும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இது தொடர்பான ஆவணங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்து உள்ளனர்.

கடந்த 22-ந் தேதி தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்று எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது மற்றும் பொதுக்குழுவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது பற்றிய ஆவணங்களை தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.

இந்த நிலையில் வழக்கு ஒன்றை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி வருகிற அக்டோபர் 31-ந் தேதிக்குள் விசாரித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி வருகிற 6-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்த தேர்தல் கமிஷன் இரு தரப்பினரும் தங்கள் ஆதரவு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல் அடங்கிய ஆவணங்களை இன்றைக்குள் (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுமாறு கோரி ஓ.பன்னீர்செல்வத்துக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் கடந்த 21-ந் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மேலும் 3 வாரங்கள் அவகாசம் வழங்க கோரி டி.டி.வி.தினகரன் அணியின் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஏற்கனவே கூறியபடி இன்றைக்குள் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ள தேர்தல் கமிஷன், திட்டமிட்டபடி 6-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட டி.டி.வி.தினகரனின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது.

இந்நிலையில் கட்சி, சின்னம் விவகாரத்தில், கூடுதல் ஆவணங்களையும், பிரமாணப் பத்திரங்களையும் முதல்-அமைச்சர் பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்மூகம் மற்றும் உதயகுமார் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தனர். இரு அணிகள் இணைப்பு தொடர்பான பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சசிகலா, டிடிவி தினகரனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், அவர்களை ஒருபோதும் தொண்டர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். 

Similar News