செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்து மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்: வைத்திலிங்கம்

Published On 2017-09-29 10:22 IST   |   Update On 2017-09-29 10:23:00 IST
ஜெயலலிதா மரணம் குறித்து மாறுபட்ட கருத்துகளை அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர் தெரிவிக்க வேண்டாம் என வைத்திலிங்கம் எம்.பி. வேண்டுகோள்விடுத்து உள்ளார்.
தாம்பரம்:

சென்னையை அடுத்த தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனையில் ஊழியர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மருத்துவமனை தலைவர் டி.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். விழாவில் அ.தி.மு.க. எம்.பி. வைத்திலிங்கம் கலந்துகொண்டு ஊழியர்களுக்கு உதவிகளை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் 98 சதவீத உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர். நிச்சயமாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. அவருடைய விசாரணைக்கு முன்னால் சொல்ல வேண்டிய கருத்துகளை சொல்லலாம்.

ஆனால் இப்போது மாறுபட்ட கருத்துகளை சொல்லி, அதனால் விசாரணை கமிஷனின் விசாரணையை பாதிக்கின்ற அளவு இருக்கக்கூடாது. எனவே அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். யார் எந்த கருத்தை சொன்னாலும் விசாரணை கமிஷன் முன்பு சொல்வதுதான் சரியாக இருக்கும்.

திருச்சியில் டி.டி.வி.தினகரனுக்கு கூடிய கூட்டத்தை பெரிய கூட்டமாக நினைக்கவில்லை. நாங்கள் கூட்ட வேண்டும் என்றால் அதைவிட பத்து மடங்கு அதிகமாக கூட்டலாம். ஒன்றரை கோடி தொண்டர்கள் அத்தனை பேரும் எங்களிடம் தான் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News