செய்திகள்
திருவேங்கை வாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியின் நுழைவு வாயில்

திருவேங்கை வாசலில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கல்குவாரிக்கு ‘சீல்’

Published On 2017-08-02 15:24 IST   |   Update On 2017-08-02 15:24:00 IST
புதுக்கோட்டை திருவேங்கை வாசலில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை:

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்களில் கடந்த ஏப்ரல் 7-ந்தேதி வருமானவரித்துறை சோதனை நடந்தது.

புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள அவரது வீடு, திருவேங்கைவாசலில் அவரது குடும்பத்தினரின் பெயரில் உள்ள கல்குவாரி, மேட்டுச்சாலையில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களும், இதன் பின்னர் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீட்டிற்கு மே 17-ந் தேதி சென்ற அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அந்த வீட்டின் ஒரு அறையில் வைத்து சீல் வைத்து விட்டு சென்றனர்.

விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி, அண்ணன் உதயகுமார் ஆகியோர் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தந்தை சின்னதம்பி உள்ளிட்டோரின் பெயரில் உள்ள சொத்துக்களை முடக்கி வைக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட பதிவாளருக்கு வருமான வரித்துறை அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் வருமான வரித்துறை சோதனையில் உட்படுத்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


இது குறித்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்தினர் கூறும்போது, வருமான வரித்துறை அலுவலர்களின் விசாரணையில் உள்ள அமைச்சர்விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்கி வைக்க வேண்டும் என்று ஜூலை 28-ந்தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் வந்தது என்று தெரிவித்தனர்.

மாவட்ட பதிவாளர் சசிகலா, வருவாய்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது. அதனை மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News