செய்திகள்

என் தொகுதியை புறக்கணித்ததால் ராஜினாமா செய்தேன்: தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பேட்டி

Published On 2017-07-21 07:35 GMT   |   Update On 2017-07-21 07:35 GMT
பெருந்துறை தொகுதிக்கு எதுவும் செய்ய முன் வராததால் அவைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பேட்டி அளித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். முன்னாள் அமைச்சரான இவர் தினகரன் அணியில் உள்ளார்.

ஈரோடு மாவட்டத்துக்கு 2 தடவை முதல்-அமைச்சர் எடப்பாடி வந்து விழாவில் கலந்து கொண்டபோதும் அந்த 2 தடவையும் முதல்வர் கலந்து கொண்ட விழாவை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. புறக்கணித்து விட்டார். அதே சமயம் தோப்பு வெங்கடாச்சலம் தனது தொகுதியில்தான் இருந்துள்ளார்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘‘நான் தவிர்க்க முடியாத வேறு ஒரு உள்ளூர் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்ததால் பங்கேற்கவில்லை’’ என்று கூறி சமாளித்தார்.

மேலும் அவர் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்ட கட்சி கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பெருந்துறை தொகுதி முன்மாதிரி தொகுதியாக மாறி இருக்கும். வளர்ச்சி திட்ட பணிகளும் நடந்திருக்கும். இப்போது எதுவும் நடக்கவில்லை. எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்று வெளிப்படையாகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சாடினார்.

இந்த நிலையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தனது சட்டபேரவை அவைக்குழு உறுப்பினர் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

இதுபற்றி இன்று அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘என் தொகுதியான பெருந்துறை தொகுதியை முதல் அமைச்சரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. மாவட்ட அமைச்சர்களும் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து புறக்கணித்து கொண்டே இருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ளேன். வேறு கருத்து ஒன்றும் சொல்ல விரும்பவில்லை’’ என்று கூறி முடித்துக் கொண்டார்.

தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர். இப்போது பவானி தொகுதி எம்.எல்.ஏ. கே.சி.கருப்பணன் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ளார். மேலும் கோபி எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் கல்வித்துறை அமைச்சராக உள்ளார். இதனால் தனக்கும் அமைச்சர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவியும் வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டு இருந்தார். விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேறும் பொறுமையாக இருங்கள் என்று முதல்வர் கூறி இருந்தாராம்.

ஆனால் காலம் கடந்து போய் கொண்டிருந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பை காட்டவே அவைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News