செய்திகள்

தமிழக அரசியல் சூழ்நிலை கவலை அளிக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2017-06-16 12:54 IST   |   Update On 2017-06-16 12:54:00 IST
தற்போதுள்ள தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை கவலையளிப்பதாக உள்ளது என காஞ்சீபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மெக்கிவால், தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு வாட்வரியின் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அரிசி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை மத்திய அரசு தவிர்த்து ஏழை எளிய மக்களுக்கு நன்மை செய்துள்ளது.

ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் தான் 18 சதவீதம் வரிவிதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விகித முறை கொண்டு வருவதனால் பல்வேறு பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. இது பொதுமக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் நல்ல பலனை தரும்.


தற்போதுள்ள தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை கவலையளிப்பதாக உள்ளது. ஆளும் கட்சி எதிர்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். சபாநாயகர், முதல்வர் ஆகியோர் எதிர்கட்சிகள் சொல்லும் கோரிக்கைளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களின் கருத்தை சொல்ல அனுமதிக்க வேண்டும். அதேபோல் எதிர்கட்சிகளும் எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு செய்வதை தவிர்த்துவிட்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க. செயல்தலைவர் பாரதிய ஜனதா அரசு கடந்த 3 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார். அது முற்றிலும் தவறானது. எண்ணற்ற திட்டங்களை பாரதிய ஜனதா அரசு செயல்படுத்தி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. தமிழக அரசு பால் பிரச்சனையில் நடவடிக்கை எடுத்தது போல பிளாஸ்டிக் அரிசி கலப்படம் இருந்தால் அதை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மாட்டிறைச்சி சாப்பிட மத்திய அரசு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை.

ஆனால் தாய்போல் வணங்கும் பசுவை விவசாயத்திற்கு என ஏமாற்றி வாங்கி சென்று இறைச்சிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க சந்தைமுறை படுத்துவதற்குத்தான் சட்டம் இயற்றியுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News