செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது: ஜி.கே.வாசன்

Published On 2017-05-23 14:19 IST   |   Update On 2017-05-23 14:19:00 IST
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. மாநில தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. மாநிலத் தொண்டரணி தலைவர் அயோத்தி தலைமை தாங்கினார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலுக்கு த.மா.கா. தயாராகி வருகிறது. தமிழகத்தில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதேபோல் நிரந்தர கவர்னரையும் மத்திய அரசு நியமிக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் அதை தீர்த்து வைப்பதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுகிறது.

வருகிற கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1-க்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் அடங்கிய குழுவை அமைத்து அதன் கருத்தை கேட்க வேண்டியது அவசியம்.


அ.தி.மு.க. ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தற்போது 2 ஆக பிரிந்துள்ள நிலையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆட்சி வேறு. இப்போது எடப்பாடி தலைமையிலான ஆட்சி வேறு. இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணைய வேண்டும் என்பது த.மா.கா.வின் விருப்பம்.

இந்த வி‌ஷயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்துக்கு தேவையான நிதிகளையும், திட்டங்களையும் பெற்று வரவேண்டும். விவசாயிகள் பிரச்சனையை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்றி வைக்க வேண்டும்.

நண்பர் ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது தனிப்பட்ட உரிமை. அவர் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதையும், நல்ல நட்பும் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஞானதேசிகன், கோவை தங்கம், ஞான சேகரன், விடியல் சேகர்., முனவர் பாட்சா, சக்தி வடிவேல், ஜி.ஆர். வெங்கடேஷ், ஜி.என். அசோகன், டி.எம்.பிரபாகர், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் மற்றும் பட்டுக்கோட்டை பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News