செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்: ராமதாஸ்

Published On 2017-05-23 13:58 IST   |   Update On 2017-05-23 13:58:00 IST
எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தமிழக மக்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு அமைக்கப்பட்டதன் முதலாமாண்டு நிறைவு விழாவை அக்கட்சியின் ஒரு பிரிவினர் இன்று கொண்டாடுகின்றனர். கடந்த 5 மாதங்களில் மூன்று முதல்-அமைச்சர்களையும், 5 முதல்-அமைச்சர் வேட்பாளர்களையும் பார்த்த இந்த அரசு, ஓராண்டைக் கவிழாமல் கடந்திருக்கிறது என்பதைத் தவிர இந்தக் கொண்டாட்டத்திற்கு வேறு காரணங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

பதவி ஏற்ற ஓராண்டு காலத்திற்குள் எந்த அரசாவது இவ்வளவு வெறுப்பையும், கோபத்தையும் மக்களிடம் சந்தித்திருக்குமா? என்ற வினாவுக்கு, ‘இல்லை’ என்று மிகவும் எளிதாக பதிலளித்து விடலாம்.

கடந்த ஓராண்டை 3 முதல்-அமைச்சர்களின் உதவியுடன் நிறைவு செய்துள்ள இந்த அரசு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடுவது, ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளியாகிவிடாமல் தடுப்பது ஆகியவற்றைத் தவிர வேறு எந்தப் பணியும் இந்த ஆட்சியில் நடைபெறவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், இப்போது தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி, தோப்பு வெங்கடாசலம் செந்தில் பாலாஜி அணி, பட்டியலினத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி என எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த எதிர்ப்புகளை சமாளிக்கவும், அதற்காக ஊழல் செய்யவும் தான் பினாமி அரசுக்கு நேரம் சரியாக உள்ளது.

தமிழகத்தில் 1921-ம் ஆண்டிலிருந்து கணக்கில் கொண்டால் 1991-96 காலத்திலான ஜெயலலிதா அரசு தான் மக்களின் அதிகபட்ச கோபத்திற்கு ஆளாகியிருந்தது. ஆனால், அதை விஞ்சும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தமிழக மக்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர்.

ஊழலில் திளைக்கும் இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து தமிழக மக்களிடம் பொதுக் கருத்துக் கணிப்பு நடத்துவதன் மூலம் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஊழல் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Similar News