செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை கிடைக்கும்வரை உள்ளாட்சி தேர்தல் நடக்காது: திருமாவளவன்

Published On 2017-05-06 12:07 IST   |   Update On 2017-05-06 12:07:00 IST
எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை கிடைக்கும்வரை உள்ளாட்சி தேர்தல் நடக்காது என்று திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் நடை பெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு பின் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இரட்டை இலை சின்னத்தை மீட்கும்வரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாது.

ஓ.பி.எஸ்.யுடன் பி.ஜே.பி. இணைந்து செயல்படுகிறது என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலோ, பொதுத் தேர்தலோ எது நடந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளோம் என ஓபிஎஸ் பேசி இருப்பது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட சவால்.


இலங்கை தமிழர்களுக்கு எதிராக பாதுகாப்பு சட்டத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கு எதிரான சட்டம். ஐ.நா. சபை இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மே தினம் என்பது உழைக்கும் வர்க்கத்தினர் தினம். உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிய கூலி, உரிமை வழங்க வேண்டும். பல நிறுவனங்கள் இதை சரியாக பின்பற்றுவது இல்லை. அதனால் மத்திய, மாநில அரசுகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Similar News