செய்திகள்

மதுக்கடைக்கு எதிராக பா.ஜனதா போராட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் கைது

Published On 2017-04-18 15:36 IST   |   Update On 2017-04-18 15:36:00 IST
மதுக்கடைக்கு எதிராக பா.ஜனதா நடத்திய போராட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:

தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு எதிராக பா.ஜனதா சார்பில் இன்று சாலை மறியல், பூட்டு போடும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பி.டி. அரசகுமார், வக்கீல் தங்கமணி, லலிதா மோகன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.



திருவல்லிக்கேணியில் உள்ள மதுபான கடையில் மீனவரணி செயலாளர் சதீஷ் தலைமையில் மதுக்கடையை பூட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மிகப்பெரிய மதுபாட்டில் ஒன்றை தயார் செய்து அந்த பாட்டிலுக்கு மாலை அணிவித்து தாலி கட்டினார்கள். பின்னர் அதை அறுத்து வீசினார்கள்.

இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சதீஷ், அரங்கண்ணன் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

கொருக்குபேட்டை ரெயில் நிலையம் சாலையில் உள்ள மதுக்கடை முன்பு வடசென்னை மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வடசென்னை மாவட்ட பொருளாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற பெண்கள் தங்கள் கையில் மஞ்சள் தாலிக்கயிறு மற்றும் கழுத்தில் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து சங்கு ஊதியபடி ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் அவர்கள் மதுக்கடை முன்பு தாங்கள் எடுத்து வந்த மதுபாட்டில்களை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம், ஜி.என்.டி. சாலையில் உள்ள மதுக்கடை முன்பு புழல் பா.ஜ.க. பொறுப்பாளர் சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மாத்தூர் எம்.எம்.டி.ஏ. மணலி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட துணைத் தலைவர் எம்.வி.சசிதரன் தலைமையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜானகிராமன், மாநில மருத்துவ பிரிவு செயலாளர் சாந்தகுமார், முத்து, வெங்கட்ராமன், பாண்டியன் உள்பட 60 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பிரதான சாலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யும் டாஸ்மாக் குடோன் உள்ளது. அங்கு இன்று மதியம் 12 மணியளவில் பா.ஜனதா கட்சியின் அம்பத்தூர் மண்டல தலைவர் சதீஷ் குமார் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது குடோனுக்குள் நுழைய முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நிர்வாகிகள் தியாகு, குப்புசாமி, பாஸ்கர், கந்தன், கிஷோர் ஆகியோரும் அடங்குவர்.

இதைபோல் கொளத்தூரில் ஊடக பிரிவு தலைவர் பிரசாத் தலைமையில் மதுக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பிரகாஷ் உள்பட பா.ஜ.க. பிரமுகர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

வேளச்சேரியில் தென் சென்னை மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர் தலைமையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மணலி மார்க்கெட்டில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மணலி பகுதி பா.ஜனதா கட்சி வட்ட தலைவர் பரிமளம், மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 35 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Similar News