செய்திகள்

காவிரியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

Published On 2017-04-13 04:07 GMT   |   Update On 2017-04-13 04:08 GMT
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிணறுகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில வாரங்களாகவே ஒகேனக்கலில் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் வரவில்லை. இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது தான் காவிரி நீரை கர்நாடகம் கிணறுகள் அமைத்து திருடுவது தெரியவந்திருக்கிறது. மாதேஸ்வரன் மலையிலிருந்து கொள்ளேகால் செல்லும் பாதையில் சரியாக 18-வது கிலோ மீட்டரில் பண்ணூர் என்ற இடம் உள்ளது. கர்நாடக எல்லையில் உள்ள இந்த ஊரில் காவிரி ஆறு சற்று வளைந்து செல்லும். அந்த இடத்தில் காவிரியை ஒட்டிய வனப்பகுதியில் 80 மீட்டர் (266 அடி) விட்டமும், 60 அடி ஆழமும் கொண்ட 6 கிணறுகளை வெட்டியுள்ள கர்நாடக அதிகாரிகள், காவிரியில் வரும் தண்ணீரை இந்தக் கிணறுகளுக்கு திருப்பி விட்டுள்ளனர்.



அவற்றில் 3 கிணறுகளில் சேரும் தண்ணீர் கொள்ளேகால் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இரு கிணறுகளில் சேரும் தண்ணீர் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும், ஒரு கிணற்றின் நீர் கொள்ளேகால் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கும் அனுப்பப்படுகிறது. வழக்கமாக வனப்பகுதியில் கிணறு தோண்ட வேண்டுமானால் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அத்தகைய அனுமதியை பெறாமலேயே கர்நாடகம் கிணறுகளை வெட்டியுள்ளது.

பிலிகுண்டுலு பகுதிக்கு முன்பாக உள்ள கர்நாடகப் பகுதிகள் பயனடைய வேண்டும் என்பதற்காக தண்ணீரை திறந்து விடும் கர்நாடக அரசு, கர்நாடகப் பகுதிகளின் தேவை தீர்ந்த பிறகு மீதமுள்ள நீர் கூட தமிழகத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக கிணறு வெட்டி திருப்பி விடுகிறது.

எனவே காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிணறுகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் வரும் ஆண்டிலாவது குறுவை, சம்பா, தாளடி போன்ற 3 போகங்களும் நன்றாக விளையும் அளவுக்கு கர்நாடகத்திடமிருந்து காவிரியில் நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின்படி தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கைகளையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Similar News