செய்திகள்

மதுவுக்கு எதிரான போராட்டத்தில் பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2017-04-12 11:32 IST   |   Update On 2017-04-12 11:32:00 IST
மதுவுக்கு எதிரான போராட்டத்தில் பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியில் கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை போலீஸ் அதிகாரி மிருகத்தனமாக தாக்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். அந்த போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. நெடுஞ்சாலைகளை குறுக்கு சந்துகளாக பெயர் மாற்றி புதிய மதுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தமிழக அரசு புதிய மதுக்கடைகளை திறக்க கூடாது. அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்.


மதுக்கடைகளுக்கு எதிராக விரைவில் தமிழகம் முழுவதும் பா.ஜனதா போராட்டம் நடத்தும்.

விவசாயிகளுக்கு உத்தர பிரதேச பா.ஜனதா அரசு பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது. அதே போல் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கும் உண்டு.

மோடி அரசு விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் இதில் 50 லட்சம் விவசாயிகள் வரை சேரலாம். ஆனால் வெறுமனை 13 ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதுபற்றி தமிழக அரசு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை.

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும். அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்வு காத்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News