செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெல்வதே இலக்கு: ஜி.கே.வாசன் பேட்டி

Published On 2017-03-31 15:25 IST   |   Update On 2017-03-31 15:25:00 IST
வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதே தமிழ் மாநில காங்கிரசின் இலக்கு என்று ஜி.கே.வாசன் கூறினார்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்ட தமிழ்மாநில காங்கிரசின் செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் காரைக்குடி சத்குரு ஞானாளந்தா மகாலில் நடைபெற்றது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் மனுத்தாக்கல் செய்து அதிக இடங்களில் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு ஆகும். மேலும் எங்களுக்கு மதிப்பளிக்கின்ற அதிக இடங்களை தருகின்ற எங்களின் பலம் அறிந்தவர்களோடு கூட்டணி அமைத்து தேர்தலில் சாதிக்கவும் தயாராக உள்ளோம்.

சமீப காலமாக அரசியலில் நடைபெறும் மாற்றங்களை, மக்கள் பார்த்துக் கொண்டு வருவதால் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். தற்போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிய வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் வறட்சி நிவாரண தொகையை உடனடியாக வழங்கி, விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் நம்பிக்கை துரோகம் நடந்துள்ளது. மக்கள் விரும்பாத திட்டத்தை அவர்கள் மீது திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


சிவகங்கை மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்டத் தலைவர் பாலசுப்பிர மணியன், மாநில பொதுச்செயலாளர் சுப. உடையப்பன், மாநில செயலாளர்கள் துரை கருணாநிதி, அழகேசன், ராஜலிங்கம், சந்தியாகு, மாநில துணைத்தலைவர் கோவை தங்கம், பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாவட்ட பொறுப்பாளர் மகாதேவன், தலைமைக்கழக பேச்சாளர் கரிகாலன், மாவட்ட துணைத்தலைவர்கள் அசோகன், ராஜேந்திரன், நகரத்தலைவர் செல்வரங்கன், முத்துவேல், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதீஷ், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்ட இளைஞரணி தலைவர் சார்லஸ் ஜான் கென்னடி நன்றி கூறினார்.

Similar News