செய்திகள்

வெற்றி-தோல்வி பற்றி கவலைப்படாமல் தேர்தலில் போட்டியிட வேண்டும்: திருநாவுக்கரசர்

Published On 2017-03-20 11:39 IST   |   Update On 2017-03-20 11:39:00 IST
வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் போட்டியிடுவதுதான் முக்கியம் என இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
கடலூர்:

இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநில மகளிர் மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

60 ஆண்டுகால ஆட்சியில் காமராஜரால் மட்டுமே 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், கனரக தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசும் நாம் இன்றைக்குத் தேர்தலில் கூட்டணியை எதிர்பார்க்கிறோம். கூட்டணி கனவை சுமந்து கொண்டிருந்தால் கட்சியை எப்படி வளர்ப்பது?

கட்சியின் கூட்டமைப்பையும், உறுப்பினர் சேர்க்கையையும் வலுப்படுத்த வேண்டும். மக்கள் பிரச்சினைக்காக போராடாமல் ஆட்சி அமைக்க முடியாது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. அதற்குள் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும்.


வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு காங்கிரசார் போட்டியிட வேண்டும். வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படக் கூடாது. போட்டியிடுவதுதான் முக்கியம்.

அடுத்த மாதம் முதல் தொகுதி வாரியாகக் கட்சியினரைச் சந்திக்கும் நிகழ்ச்சி, உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

பெண் கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் வளர்ச்சி யடையாமல் நாடு முன்னேற்ற மடையாது. மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் உள்ளனர். அவர்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாக இருக்க முடியும்.

தொழில்நுட்ப வளர்ச்சி, ராணுவ வலிமை, அணு சக்தி, தொழில் வளர்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்தியா இன்றைக்கு வளர்ச்சி பெற்றுள்ளதற்கு இந்திராகாந்தியின் தொலை நோக்குப் பார்வையே காரணம். அவரின் செயல் பாடுகளே இவற்றுக்கு அடித்தளமிட்டன. அவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு ழுழுவதும் நாம் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News