செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் நிறுத்தப்பட காரணம் என்ன?

Published On 2017-03-16 03:56 GMT   |   Update On 2017-03-16 03:56 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும், தமிழக முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் காலியான அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் ஆட்சி மன்றக்குழு கூடி, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக அறிவித்துள்ளது.



தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சசிகலா குடும்பத்தை சேர்ந்த டி.டி.வி.தினகரன் தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் தெரிந்திருக்கும் பிரபலமானவர். அப்படி இருக்கும் போது ஏன் அவரை எதிர்த்து இன்னொரு பிரபலமானவரை தி.மு.க. நிறுத்தவில்லை என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. தி.மு.க.வின் நிலைப்பாட்டிற்கு பின்னால் அதன் வரலாற்று சான்று உள்ளது.



1996-ம் ஆண்டு பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட போது, அவருக்கு எதிராக தி.மு.க.வில் சாதாரண உறுப்பினராக இருந்த சுகவனம் நிறுத்தப்பட்டார். அப்போது, சுகவனம் 59 ஆயிரத்து 148 வாக்குகளும், ஜெயலலிதா 50 ஆயிரத்து 782 வாக்குகளும் பெற்றிருந்தனர். தமிழக மக்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத தி.மு.க. வேட்பாளர் சுகவனம் 8 ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதாவை அதிர்ச்சி தோல்வியடைய செய்தார்.

மக்களிடையே மிகவும் பிரபலமான, நட்சத்திர வேட்பாளரான ஜெயலலிதாவையே சாதாரண வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தி.மு.க. தோல்வி அடையச்செய்த யுக்தியை கடைப்பிடித்தது. இதுபோன்ற அதிரடி திட்டத்தைத்தான் ஆர்.கே.நகரில் செயல்படுத்த தி.மு.க. முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக சாதாரண தொண்டராக உள்ள மருதுகணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தி.மு.க. வேட்பாளரான மருதுகணேஷ் அடிப்படையில் ஒரு செய்தியாளராக 25 ஆண்டுகளாக வட சென்னை பகுதியில் பணியாற்றியவர். செய்தி சேகரிக்கும் பணிகளுக்கு இடையே கட்சி பொறுப்புகளையும் கவனித்து வந்தார். மருதுகணேசுக்கு ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் அடிப்படை பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளும் அத்துப்படி என்கிறார்கள் தி.மு.க. தரப்பினர்.

எனவே, டி.டி.வி.தினகரனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்பதால்தான், அவரை களம் இறக்கியுள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் ஆணித்தரமாக கூறுகின்றன. 1996-ம் ஆண்டு பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதாவை தோற்கடித்த சுகவனம் போல், டி.டி.வி.தினகரனை, மருதுகணேஷ் தோற்கடிப்பார் என்ற நம்பிக்கையோடு தி.மு.க. களம் இறக்கியுள்ளது. தேர்தல் முடிவின்போது தான் தி.மு.க.வின் வியூகம் பலன் அளிக்குமா? இல்லையா? என்பது தெரியும்.

Similar News