எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு ஊழல் இல்லாததாக அமைய வேண்டும்: திருநாவுக்கரசர் பேட்டி
ஆலந்தூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
சட்டசபையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் எம்.எல். ஏக்களை கட்சி தலைவர் என்ற முறையில் அழைத்துள்ளேன். இந்த கூட்டம் இன்று மாலை சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது.
சட்டமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க ஆளுனர் கூறி இருப்பது சரியான நடவடிக்கை. புதிதாக பதவி ஏற்று உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு முறையாகவும், ஊழலற்ற, லஞ்சம் இல்லாத, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொது மக்களுக்கு நன்மை செய்கிற அரசாகவும் இருக்க வேண்டும்.
புதுக்கோட்டையில் மீத்தேன் எரிவாயு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியும் இதை எதிர்க்கிறோம். தேவைப்பட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.