செய்திகள்

தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதே நலம்: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2017-02-15 13:54 IST   |   Update On 2017-02-15 13:54:00 IST
இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதே நலம் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
ஈரோடு:

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி வளர்ச்சிக்காக சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இதன் முதற்கட்டமாக ஈரோடு தெற்கு மாவட்டத்தில் இன்று ஊழியர்கள் கூட்டம் நடந்தது. மாலையில் பவானியில் நடக்கும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளேன்.

தமிழ்நாட்டில் இதுவரை இருதுருவ ஆட்சி நடந்து வருகிறது. இந்த திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் மாற்று அரசு உருவாக மக்கள் முன் வர வேண்டும்.

தமிழ்நாட்டில் இப்போது ஆரோக்கியமற்ற சூழ்நிலை உள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தமிழகம் வெளியே வர வேண்டும். நல்ல நிர்வாகம் ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் தமிழ்நாட்டில் நடக்க வேண்டும். ஊழல் செய்த பணத்தை வைத்து சிலர் ஆட்சிக்கு வர முயல்வது முற்றிலும் தவறானது.

முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா சினிமா நட்சத்திரமாக இருந்து அபரிதமான சொத்துக்களை சேர்த்தார். எனவே ஊழல் செய்து பணம் சம்பாதிக்க அவசியம் அவருக்கு இல்லை. ஜெயலிலதா மீது ஊழல் சாயம் வரக்கூடிய அளவுக்கு சசிகலா துணை புரிந்து விட்டார். நல்ல நிர்வாகம் ஊழலற்ற நிர்வாகம் நடக்கவே தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இந்த சூழ்நிலை ஏற்படவில்லையென்றால் தேர்தலை சந்திப்பது நலமாக இருக்கும்.

கூவத்தூரில் வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் தொகுதிக்கு சென்று பொதுமக்களின் ஆலோசனை பெற்று அதன் பிறகு யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? என முடிவு செய்வது நலமாக இருக்கும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Similar News